*நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் மும்முரம்
திருப்பூர் : திருப்பூர், வளர்மதி சந்திப்பில் உள்ள பாதாளச்சாலை (சுரங்கப் பாதை) கட்டுமானப் பணிகளை பொங்கலுக்கு முன்பு முடிக்க மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.
திருப்பூர் வடக்குப் பகுதியில் இருந்து தெற்கு நோக்கிச்செல்லும் வாகனங்களுக்கு குமரன் சாலை நகரின் முக்கிய சாலையாகும். வளர்மதி சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் காரணமாக இந்தச் சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து ஒரு பிரச்னையாக உள்ளது.
பண்டிகைகள் மற்றும் விஷேச நாட்களில் வாகன ஓட்டிகளுக்கு இது ஒரு பெரிய சிக்கலாகும். போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க, மாநில நெடுஞ்சாலைத்துறை, வளர்மதி சந்திப்பில் நொய்யல் ஆற்றை ஒட்டி ரூ.22 கோடி மதிப்பீட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சுரங்கப்பாதை பணியை வரவிருக்கும் பொங்கல் பண்டிகைக்கு முன்பு முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்கும் வகையில் 70 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாநில நெடுஞ்சாலைத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:இந்தப் பணிகள் முடிந்ததும், வளம் பாலச் சாலையிலிருந்து பார்க் சாலை நோக்கி வரும் வாகனங்கள் எந்தத் தடையும் இல்லாமல் சுரங்கப்பாதை வழியாகச் செல்லும். அதேபோல், குமரன் சாலையிலிருந்து வளர்மதி சந்திப்பு நோக்கி வரும் வாகனங்களும் சிக்னல் இல்லாமல் போகும். இது குமரன் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு ஒரு தீர்வாக அமையும்.
சுமார் 300 மீட்டர் நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை, பார்க் சாலையையும் வளம் பாலச் சாலைகளையும் இணைக்கிறது. தற்போது சுமார் 70 சதவீதம் பணிகளை முடித்து விட்டோம். நான்கு சாலைகளின் சந்திப்பில் சுமார் 40 மீட்டர் நீளம், 8 மீட்டர் அகலம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் ஒரு கான்கிரீட் பெட்டியை அமைத்து வருகிறோம். அந்தப் பணி மட்டுமே நிலுவையில் உள்ளது.
அதை விரைவாக முடிக்க இப்போது பணிகளை விரைவுபடுத்தி உள்ளோம். டிசம்பர் இறுதிக்குள் அல்லது பொங்கலுக்கு முன் பணியை முடிக்க திட்டமிட்டுள்ளோம். இந்த சுரங்கப்பாதைக்கான செயல்முறை 2009ல் தொடங்கியது, ஆனால் நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமானது. இது நிலம் கையகப்படுத்துதலிலும் தாமதத்தை ஏற்படுத்தியது. இவ்வாறு கூறினார்.
மாநகர போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘வளர்மதி சுரங்கப்பால பணிகளால் தற்போது வடக்கு பகுதியிலிருந்து தெற்கு பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு கூடுதல் போலீசாரை நியமித்து போக்குவரத்தை சரி செய்து வருகிறோம். விரைவில் சுரங்கப்பாதை பணிகள் நிறைவு பெறும் பட்சத்தில் போக்குவரத்துக்கு எந்த இடையூறுமின்றி இருக்கும்’’ என்றார்.
