Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நம்மாழ்வார் மோட்சம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு நாளையொட்டி இன்று நம்மாழ்வார் மோட்சம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ தலங்களில் முதன்மையானதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 19ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு கடந்த 30ம் தேதி அதிகாலை நடைபெற்றது. தொடர்ந்து ராப்பத்து உற்சவம் நடந்தது. ராப்பத்து 7ம் நாளன்று திருக்கைத்தல சேவையும், 8ம் நாளன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

ராப்பத்து நிறைவு நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். இதையடுத்து நம்பெருமாள் நேற்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி ஆழ்வார்கள், ஆச்சார்யர்களுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை உற்சவர் நம்பெருமாள், நம்மாழ்வாருக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்ச்சி ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி பரமபதவாசலுக்கு செல்லும் வழியில் ஒரு பக்தன் வேடத்தில் நம்மாழ்வார் வெள்ளை உடை உடுத்தி பன்னிருநாமமும், துளசி மாலையும் தரித்து காட்சியளித்தார்.

பின்னர் நம்மாழ்வாரை 2 அர்ச்சகர்கள் தூக்கிக்கொண்டு சென்று, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளியிருந்த நம்பெருமாள் திருவடியில் நம்மாழ்வாரின் நெற்றிபடும்படி சரணாகதியாக படுக்கை வசத்தில் சமர்ப்பித்தனர். பின்னர் நம்மாழ்வாரை துளசியால் அர்ச்சகர்கள் பல்வேறு வேதங்கள் கூறியபடி மூடினர். இதையடுத்து பல்வேறு வேதங்களை கூறியபடி நம்மாழ்வார் மீது மூடப்பட்டிருந்த துளசியை மெதுவாக அகற்றினர். பின்னர் நம்பெருமாள் முன் நம்மாழ்வாரை தூக்கி காண்பித்து மோட்சம் அடைந்ததாக தெரிவித்தனர். அப்போது நம்மாழ்வாருக்கு நம்பெருமாளுடைய கஸ்தூரி திலகமும், துளசிமாலையும் அணிவிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து காலை 8 மணி முதல் 9 மணி வரை உபயக்காரர் மரியாதையுடன் பக்தர்களுக்கு நம்பெருமாள் காட்சியளித்தார். காலை 9.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு படிப்பு கண்டருளி, ஆழ்வார், ஆச்சார்யர் மரியாதையாகி காலை 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பின்னர் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் நாளை(10ம் தேதி) அதிகாலை 2 மணி வரைசந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

ரங்கநாச்சியார் ஏகாதசி விழா நாளை தொடக்கம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பெருமாளுக்கு நடத்தப்படும் விழாக்கள் அனைத்தும் தாயாருக்கும் நடத்தப்படும். அதன்படி உற்சவர் நம்பெருமாள் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெற்றதைதொடர்ந்து நாளை(10ம் தேதி) முதல் உற்சவர் ரங்கநாச்சியாருக்கு வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து உற்சவம் முதல் நாள் நிகழ்ச்சியுடன் தொடங்கி, வரும் 20ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. இதில் பகல் பத்து உற்சவம் 5 நாட்களும், ராப்பத்து உற்சவம் 5 நாட்களும் நடைபெறும். நாளை முதல் ரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்தவாறே பகல் பத்து உற்சவமான இரண்டாயிரம் திருமொழி பாசுரங்களை 5 நாட்கள் தினமும் மாலையில் கேட்டருளுவார். ராப்பத்து உற்சவம் எனப்படும் திருவாய்மொழி திருநாள் வரும் 15ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறுகிறது. 20ம் தேதி இயற்பா சாற்றுமுறை நடைபெறும்.

20 லட்சம் பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி கடந்த 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை 6 லட்சம் பக்தர்களும், 29, 30ம் தேதிகளில் 2.75 லட்சம் பக்தர்களும் நம்பெருமாள் மற்றும் சொர்க்கவாசல் தரிசனம் செய்துள்ளனர். அதேபோல் ராப்பத்து உற்சவத்தில் 31ம் தேதி முதல் 5ம் தேதி வரை 7 லட்சம் பக்தர்களும், 5ம் தேதி திருக்கைத்தல சேவையன்று 1 லட்சம் பேரும், 6ம் தேதி வேடுபறியன்று 1 லட்சம் பேரும் தரிசனம் செய்தனர். நேற்று 70 ஆயிரம் பேரும், விழாவின் நிறைவு நாளான இன்று 1 லட்சம் பக்தர்கள் என கடந்த 21 நாட்களில் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.