Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பெண் உறுப்பு பிரச்னைகளும் தீர்வுகளும்!

பெண்களின் உடலில் ஏற்படும் இயற்கையான மாற்றங்களில் ஒன்று பெண் உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவச் சுரப்பு. இதை பல பெண்கள் “வெள்ளைப்படுதல்” என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், எல்லா வகையான திரவச் சுரப்பும் நோயின் அறிகுறி அல்ல. உண்மையில், பெண் உறுப்பை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும், தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும், இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இந்தச் சுரப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. திரவத்தின் நிறம், தன்மை, மணம் மற்றும் அதனுடன் தோன்றும் அறிகுறிகளைப் பொறுத்து அது இயல்பானதா அல்லது மருத்துவக் கவனம் தேவைப்படுகிறதா என்பதை முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

இயல்பான திரவச்சுரப்பு எப்படி இருக்கும்?

சாதாரணமாக, தெளிவான அல்லது லேசான வெள்ளை நிறத்தில், துர்நாற்றம் இல்லாமல் வெளிப்படும் திரவம் உடலின் இயல்பான செயல்பாடுதான். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில், அதாவது முட்டை வெளியேறும் காலத்தில், முட்டையின் வெள்ளைக்கரு போன்ற வழவழப்பான தன்மையுள்ள திரவம் சுரப்பது மிகவும் இயல்பானது. இது ஹார்மோன்களின் செயல்பாட்டால் ஏற்படுகிறது. கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கவும், விந்தணுக்கள் எளிதாக கருப்பையை அடையவும் இந்தத் திரவம் உதவுகிறது.

முட்டையின் வெள்ளை போன்ற திரவம் ஏன் வருகிறது?

மாதவிடாய் முடிந்து சில நாட்களுக்குப் பிறகு, உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். இந்த நேரத்தில் பெண் உறுப்பில் இருந்து முட்டையின் வெள்ளைக்கரு போன்ற தெளிவான, வழவழப்பான திரவம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடையாளங்களில் ஒன்றாகும். இந்தத் திரவம் துர்நாற்றம் இல்லாமல், அரிப்பு அல்லது வலி இல்லாமல் இருந்தால் கவலைப்பட வேண்டியதில்லை.

எப்போது கவனமாக இருக்க வேண்டும்?

திரவம் மஞ்சள், பச்சை அல்லது சாம்பல் நிறத்தில் இருந்தால், அதனுடன் துர்நாற்றம், அரிப்பு அல்லது எரிச்சல் இருந்தால் அது தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். தயிர் போன்ற கெட்டியான வெள்ளைத் திரவம் மற்றும் கடுமையான அரிப்பும் பூஞ்சைத் தொற்றைக் குறிக்கலாம். மீன் நாற்றம் போன்ற துர்நாற்றம் இருந்தால் பாக்டீரியா தொற்று இருக்கலாம். நுரை போன்ற மஞ்சள் அல்லது பச்சை நிறத் திரவம் பால்வினைத் தொற்றுகளின் அறிகுறியாகவும் இருக்கக்கூடும்.

இரத்தம் கலந்த திரவம் வந்தால்?

மாதவிடாய் தொடங்கும் முன்போ அல்லது முடிந்த பிறகோ பழுப்பு அல்லது இரத்தம் கலந்த திரவம் வெளிப்படுவது இயல்பாக இருக்கலாம். ஆனால், மாதவிடாய் இல்லாத நாட்களில் தொடர்ந்து இரத்தம் கலந்த திரவம் வெளிப்பட்டால் அல்லது அதனுடன் வலி இருந்தால் மருத்துவரை அணுகுவது அவசியம்.

அறிகுறிகளை அலட்சியப் படுத்தாதீர்கள்!

பெண் உறுப்பில் இருந்து வெளிப் படும் திரவத்துடன் கடுமையான துர்நாற்றம், அரிப்பு, எரிச்சல், அடிவயிற்று வலி, காய்ச்சல் அல்லது தாம்பத்தியத்தின் போது வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மகளிர் மருத்துவரை அணுக வேண்டும். சுயமாக மருந்துகளைப் பயன்படுத்துவது அல்லது வீட்டு வைத்தியங்களை முயற்சிப்பது பிரச்னையை மோசமாக்கலாம்.

பெண் உறுப்பின் ஆரோக்கியத்தை எப்படி பாதுகாப்பது?

தினசரி சுத்தம் மிக அவசியம், பருத்தி உள்ளாடைகளை அணிவது, ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணியாமல் இருப்பது மற்றும் அதிக வாசனை கொண்ட சோப்புகள் அல்லது திரவங்களைத் தவிர்ப்பது நல்லது. பெண் உறுப்பின் உட்புறம் சோப்பு, வாசனை நிறைந்த வாஷ்கள் கொண்டு சுத்தம் செய்யும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான பாலியல் பழக்கங்களைப் பின்பற்றுவதும், உடலில் ஏதேனும் அசாதாரண மாற்றங்கள் தெரிந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகுவதும் அவசியம்..

வெள்ளைப்படுதல் ஆபத்தா?

வெள்ளைப்படுதல்: காரணங்களும் தீர்வுகளும் பெண் உறுப்பு திரவச் சுரப்புகளில் இன்றும் குழப்பங்களை அதிகம் உருவாக்குவது இந்த வெள்ளைப் படுதல்தான். பெண்களுக்கு ஏற்படும் பொதுவான உடல்நல மாற்றங்களில் ஒன்று வெள்ளைப்படுதல். இதை மருத்துவ ரீதியாக யோனித் திரவச் சுரப்பு (Vaginal discharge) என்று அழைக்கிறார்கள். பல பெண்கள் இதை ஒரு நோயாகக் கருதினாலும், எல்லா வெள்ளைப்படுதலும் பிரச்னை அல்ல. பெண் உறுப்பை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும், தொற்றுகளில் இருந்து பாதுகாக்கவும் இந்தத் திரவச் சுரப்பு உதவுகிறது.

எப்போது வெள்ளைப்படுதல் இயல்பானது?

* பருவமடைந்த பிறகு.

* மாதவிடாய் சுழற்சியின் நடுப்பகுதியில் முட்டை வெளியேறும் காலத்தில்.

* கர்ப்பகாலத்தில்.

* பாலியல் தூண்டுதலின் போது.

* மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக.

இந்த நேரங்களில் வெளிப்படும் திரவம் பொதுவாக தெளிவாகவோ அல்லது லேசான வெள்ளை நிறத்திலோ இருக்கும். துர்நாற்றம், அரிப்பு அல்லது வலி இருக்காது.

வெள்ளைப்படுதலுக்கான காரணங்கள் வெள்ளைப்படுதல் அதிகமாகவோ அல்லது அசாதாரணமாகவோ இருந்தால் அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்.

பூஞ்சைத் தொற்று: கெட்டியான தயிர் போன்ற வெள்ளைத் திரவம், கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும்.

பாக்டீரியா தொற்று: சாம்பல் அல்லது மஞ்சள் நிறத் திரவத்துடன் மீன் நாற்றம் போன்ற துர்நாற்றம் காணப்படலாம்.

பால்வினை மூலம் பரவும் தொற்றுகள்: மஞ்சள் அல்லது பச்சை நிறத் திரவம், வலி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தலாம்.

ஹார்மோன் மாற்றங்கள்: கர்ப்பம், கருத்தடை மாத்திரைகள் மற்றும் மாதவிடாய் சுழற்சி மாற்றங்களாலும் வெள்ளைப்படுதல் அதிகரிக்கலாம்.

சர்க்கரை நோய் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு: சில பெண்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட்டு வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கலாம்.

வெள்ளைப்படுதலுடன் சேர்ந்து கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுக வேண்டும்.

* கடுமையான துர்நாற்றம்.

* மஞ்சள், பச்சை அல்லது சாம்பல் நிறத் திரவம்.

* அரிப்பு மற்றும் எரிச்சல்.

* அடிவயிற்று வலி.

* காய்ச்சல்.

* உடலுறவின்போது வலி.

* இரத்தம் கலந்த திரவம்.

தீர்வுகள் மற்றும் முன்னெச்சரிக்கை வெள்ளைப்படுதலுக்கான சிகிச்சை அதற்கான காரணத்தைப் பொறுத்து மாறுபடும். தொற்று இருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். தாமாக மருந்துகளை வாங்கிச் சாப்பிடக் கூடாது.

அன்றாட வாழ்வில் சில பழக்கவழக்கங்கள் வெள்ளைப்படுதலைக் கட்டுப்படுத்த உதவும்.

* பெண் உறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

* பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள்.

* ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணியாதீர்கள்.

* அதிக வாசனை கொண்ட சோப்பு மற்றும் ஸ்ப்ரேக்களைத் தவிருங்கள்.

* பெண் உறுப்பை உள்ளே கழுவும் பழக்கத்தைத் தவிர்க்கவும்.

* பாதுகாப்பான பாலியல் பழக்கங் களைப் பின்பற்றுங்கள்.

* போதுமான அளவு தண்ணீர் குடித்து சத்தான உணவுகளை உட்கொள்ளுங்கள்.

* நிறைய பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழக்கங்கள் கடைப்பிடியுங்கள்.

* இரவில் உறங்கும்போது காற்றோட்டமான உடைகள் மிக அவசியம்.

வெள்ளைப்படுதல் குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் வெள்ளைப்படுதல் ஏற்பட்டால் உடலில் சத்து குறைந்துவிட்டது அல்லது உடல் பலவீனமாகிவிட்டது என்று பலர் நினைக்கிறார்கள். இது உண்மையல்ல. இயல்பான வெள்ளைப்படுதல் என்பது பெண்களின் உடலில் நடைபெறும் ஆரோக்கியமான செயல்பாடுகளில் ஒன்று. ஆனால், நிறம், துர்நாற்றம் அல்லது அதனுடன் ஏற்படும் பிற அறிகுறிகளில் மாற்றம் தென்பட்டால் அதைக் கவனித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

வெட்கப்பட வேண்டாம்... விழிப்புணர்வு அவசியம்!

பெண் உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவம் என்பது பெண்களின் உடலில் இயற்கையாக நடைபெறும் ஒரு ஆரோக்கியமான செயல்முறை. குறிப்பாக முட்டையின் வெள்ளைக்கரு போன்ற தெளிவான, வழவழப்பான திரவம் வெளிப்படுவது பெரும்பாலும் முட்டை வெளியேறும் காலத்தின் அடையாளம் மட்டுமே. ஆசாதாரண மாற்றங்கள் ஏற்பட்டால் அதை வெட்கப்படாமல் மருத்துவரிடம் தெரிவிப்பது அவசியம். பெண்கள் தங்கள் உடலில் ஏற்படும் இந்த இயல்பான மாற்றங்களைப் புரிந்துகொண்டு விழிப்புணர்வுடன் இருப்பதே ஆரோக்கியமான உடல்நலத்திற்கான முதல் படி.

- ஷாலினி நியூட்டன்.