பெண் உறுப்பில் (யோனி மற்றும் வெளிப்புற பிறப்புறுப்பு) ஏற்படும் சில பொதுவான பிரச்னைகளை ஆரம்ப நிலையிலேயே சரியான பராமரிப்பால் கட்டுப்படுத்த முடியும். ஆனால் சில அறிகுறிகள் தீவிர நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். எனவே வீட்டிலேயே செய்யக்கூடிய பாதுகாப்பான வழிமுறைகளையும், மருத்துவரை எப்போது கட்டாயம் அணுக வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம்.
அரிப்பு (Itching)
பிறப்புறுப்புப் பகுதியில் அரிப்பு ஏற்படுவதற்கு பூஞ்சைத் தொற்று, வியர்வை, அலர்ஜி, இறுக்கமான ஆடைகள் அல்லது வாசனை திரவங்கள் பயன்படுத்துவது போன்றவை காரணமாக இருக்கலாம்.
வீட்டிலேயே செய்யலாம்
தினமும் வெதுவெதுப்பான நீரில் மட்டும் சுத்தம் செய்யுங்கள்.
பருத்தி உள்ளாடை அணியுங்கள்.
ஈரமான ஆடைகளை நீண்ட நேரம் அணியாதீர்கள்.
வாசனை சோப்பு, பெமினின் வாஷ், டியோடரண்ட் போன்றவற்றை தவிர்க்கவும்.
மருத்துவரை அணுக வேண்டிய நிலை
அரிப்பு 23 நாட்களுக்கு மேல் நீடித்தால்.
வெள்ளைப்படுதல், துர்நாற்றம் அல்லது சிவத்தல் இருந்தால்.
மீண்டும் மீண்டும் அரிப்பு வந்தால்.
வெள்ளைப்படுதல் (Vaginal Discharge) போன்ற பிரச்னைகளுடன் இருப்பின் மருத்துவரை அணுகவும். மேலும் நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு அரிப்பு எனில் நிச்சயம் மருத்துவர் ஆலோசனை பெற்று தக்க சிகிச்சை எடுப்பது அவசியம்.
சாதாரணமாக மாதவிடாய் சுழற்சியின் சில நாட்களில் வெள்ளை நிற சுரப்பு வருவது இயல்பானது.
வீட்டிலேயே செய்யலாம்
பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஈரப்பதம் அதிகரிக்காதபடி கவனியுங்கள்.
மருத்துவரை அணுக வேண்டிய நிலை
மஞ்சள், பச்சை அல்லது சாம்பல் நிற சுரப்பு.
மோசமான துர்நாற்றம் இருந்தாலோ, உடன் அரிப்பு, எரிச்சல் அல்லது வலியுடன் இருந்தால்.
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால் நிச்சயம் மருத்துவர் சந்திப்பு அவசியம்.
இது சிறுநீரகத் தொற்று அல்லது பிறப்புறுப்பு தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.
வீட்டிலேயே செய்யலாம்
அதிக தண்ணீர் குடிக்கவும்.
சிறுநீரை அடக்கி வைக்காதீர்கள்.
மருத்துவரை அணுக வேண்டிய நிலை
காய்ச்சல்.
முதுகு வலி.
சிறுநீரில் ரத்தம்.
எரிச்சல் ஒரு நாளுக்கு மேல் நீடித்தால்.
வறட்சி (Vaginal Dryness)
மாதவிடாய் நிற்கும் காலம், தாய்ப்பால் கொடுக்கும் காலம் அல்லது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படலாம்.
வீட்டிலேயே செய்யலாம்
போதுமான தண்ணீர் குடிக்கவும்.
மருத்துவர் பரிந்துரைக்கும் நீர் அடிப்படையிலான லூப்ரிகண்ட் பயன்படுத்தலாம்.
மருத்துவரை அணுக வேண்டிய நிலை
உடலுறவில் கடுமையான வலி.
ரத்தப்போக்கு.
நீண்டகால வறட்சி.
சிறிய கட்டி அல்லது பரு
முடி வேரில் தொற்று அல்லது சுரப்பி அடைப்பு காரணமாக இருக்கலாம்.
வீட்டிலேயே செய்யலாம்
வெதுவெதுப்பான ஒத்தடம் கொடுக்கலாம்.
அழுத்தி உடைக்க முயற்சிக்காதீர்கள்.
மருத்துவரை அணுக வேண்டிய நிலை
கட்டி பெரிதாக வளர்ந்தால்.
கடுமையான வலி அல்லது காய்ச்சல் இருந்தால்.
சீழ் வெளியேறினால்.
துர்நாற்றம் போன்றவற்றிற்கு நிச்சயம் மருத்துவர் ஆலோசனைகள் அவசியம்.
சில நேரங்களில் சுத்தமின்மை காரணமாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பாக்டீரியா தொற்றின் அறிகுறியாகவும் இருக்கலாம்.
வீட்டிலேயே செய்யலாம்
தினசரி சுத்தம் அவசியம்.
உள்ளாடையை அடிக்கடி மாற்றுங்கள்.
மருத்துவரை அணுக வேண்டிய நிலை
துர்நாற்றம்.
அசாதாரண நிற சுரப்பு.
அரிப்பு அல்லது வலியுடன் இருந்தால்.
உடனடியாக மருத்துவரை அணுக வேண்டிய அறிகுறிகள்
கர்ப்ப காலத்தில் ரத்தப்போக்கு
அல்லது அதிக நீர்ப்போக்கு.
மாதவிடாய் இல்லாத நேரத்தில் ரத்தப்போக்கு.
தாங்க முடியாத அடிவயிற்று வலி.
உடலுறவுக்குப் பிறகு ரத்தப்போக்கு.
அதிக காய்ச்சலுடன் யோனி வலி.
பிறப்புறுப்பில் ஆறாத புண் அல்லது கொப்புளங்கள்.
துர்நாற்றத்துடன் மஞ்சள் அல்லது பச்சை நிற சுரப்பு.
மீண்டும் மீண்டும் தொற்று ஏற்படுவது.
40 வயதுக்கு மேல் புதிய ரத்தப்போக்கு அல்லது அசாதாரண சுரப்பு.
தவிர்க்க வேண்டியவை
யோனியின் உள்ளே நீர் அல்லது வேறு திரவங்களை செலுத்தி சுத்தம் செய்வது (Vaginal douching).
மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஆன்டிபயாட்டிக் அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவது.
அதிக வாசனை கொண்ட இன்டிமேட் வாஷ், ஸ்ப்ரே அல்லது பவுடர் பயன்படுத்துவது.
ஈரமான உள்ளாடையை நீண்ட நேரம் அணிவது.
குறிப்பு: யோனி இயற்கையாகவே தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொள்ளும் உறுப்பு. வெளிப்புற பகுதியை வெதுவெதுப்பான நீரால் சுத்தம் செய்து, உலர்வாக வைத்திருப்பது பெரும்பாலான பெண்களுக்கு போதுமான பராமரிப்பாகும். அசாதாரண அறிகுறிகள் தோன்றினால் சுயமருத்துவத்தை விட மகப்பேறு மற்றும் மகளிர் நல மருத்துவரை அணுகுவது பாதுகாப்பானது.
- எஸ்.விஜயலட்சுமி


