ஊத்துக்கோட்டையில் பலத்த மழையால் மின்சாரம் துண்டிப்பு: 50 கிராமங்கள் இருளில் மூழ்கியது: நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றுப்பகுதிகளில் திடீரென பெய்த பலத்த மழையால் 50 கிராமங்கள் இருளில் மூழ்கியது. நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலையில் மூழ்கியுள்ளனர்.
ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான பாலவாக்கம், தாராட்சி, தொம்பரம்பேடு, பாலவாக்கம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி, பெரியபாளையம், அரியப்பாக்கம், தண்டலம், சூளைமேனி உள்ளிட்ட பல கிராமங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கூழ், தர்பூசணி, மோர், வெள்ளரிக்காய் மற்றும் குளிர்பானங்களை நாடி சென்றனர். மேலும் வெயிலால் மக்கள் பிற்பகல் 11 மணி முதல் 5 மணி வரை வெளியே வர முடியாமல் தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது பின்னர் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. கடும் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள போந்தவாக்கம், பெரிஞ்சேரி, கச்சூர், சீத்தஞ்சேரி, கூனிப்பாளையம் போன்ற 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதனால் குழந்தைகள், முதியவர் என பலரும் கொசுக்கடியால் கடும் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் காற்று மழையால் தண்டலம், அரியப்பாக்கம், வடமதுரை, செங்காத்தாகுளம் பகுதிகளில் நெல்பயிர்கள் சாய்ந்தது. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் சாய்ந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் மின்வாரியத்தினர் ஈடுபட்டு வருகிறார்கள். பெரியபாளையம் பகுதியில் நேற்று அடித்த சூறைக்காற்றில் ஆர்.ஐ மற்றும் விஏஓ அலுவலகங்கள் மீது ராட்சத மரம் வேரோடு சாய்ந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.


