நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், நம்பர் 1 வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) சுமார் 5 மணி நேரம் போராடி வென்றார். முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்ஸோ சொனேகோவுடன் மோதிய அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-4 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றாலும், அடுத்த 2 செட்களிலும் கடும் நெருக்கடி கொடுத்த சொனேகோ 6-3, 7-6 (9-7) என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். இதைத் தொடர்ந்து, 4வது மற்றும் 5வது செட்டில் அனல் பறந்தது. அதில் சொனேகோவின் சர்வீஸ் ஆட்டங்களை சிறப்பாக செயல்பட்டு முறியடித்த ஸ்வெரவ் 6-4, 3-6, 6-7 (7-9), 7-5, 6-4 என்ற கணக்கில் போராடி வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 4 மணி, 53 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு முதல் சுற்றில் இத்தாலியின் பிளாவியோ கொபோலி 3-6, 2-6, 6-3, 6-4, 6-4 என 5 செட்களில் அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ கம்சனாவை வீழ்த்தினார். இந்த போட்டியும் 4 மணி, 13 நிமிட நேரத்துக்கு நீடித்து ரசிகர்களுக்கு திகட்டாத டென்னிஸ் விருந்தாக அமைந்தது. அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், பிரான்ஸ் நட்சத்திரம் கேல் மான்பில்ஸ், இத்தாலி வீரர் லாரன்சோ முசெட்டி ஆகியோரும் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃப் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் சீன வீராங்கனை ஜெய்னப் சன்மெஸ்ஸை வீழ்த்தி 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றில் உள்ளூர் நட்சத்திரம் மேடிசன் கீஸ் 7-5, 6-4 என்ற நேர் செட்களில் அலினா கோர்னீவாவை வென்றார். ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா (5வது ரேங்க், 19 வயது) தனது முதல் சுற்றில் 6-2, 6-2 என்ற நேர் செட்களில் இந்தோனேசியா வீராங்கனை ஜேனிஸ் ட்ஜெனை எளிதாக வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். செக் குடியரசின் அலெக்சாண்ட்ரா இயலா, கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா (2வது ரேங்க்), மரியா சாக்கரி (கிரீஸ்) ஆகியோரும் 2வது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.



