மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் கடந்த ஞாயிறன்று இரவு பஹ்ரைன் செல்லும் கல்ஃப் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்படத் தயார்நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் செல்ல வேண்டிய பயணிகளின் உடைமைகளை சென்னை விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, விமானத்துக்கு அனுப்பி கொண்டிருந்தனர். இதற்கிடையே, அந்த விமானத்தில் பயணிகள் மூலமாக அதிகளவு ஹவாலா பணம் வெளிநாட்டுக்கு கடத்தப்படுவதாக, அன்று மாலை சென்னையில் உள்ள டிஆர்ஐ எனும் மத்திய வருவாய் புலனாய்வு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் அன்றிரவு பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதியில், வெளிநாடு செல்லும் பயணிகளை டிஆர்ஐ அதிகாரிகளின் தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்தனர்.
இந்நிலையில், அன்றிரவு சென்னை விமானநிலைய பன்னாட்டு முனையத்தில் இருந்து பஹ்ரைன் செல்வதற்கு வந்திருந்த சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகளும் பாதுகாப்பு சோதனை பகுதிக்கு வந்தனர். அவர்களை டிஆர்ஐ தனிப்படை அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர். பின்னர் அவர்களின் சூட்கேஸ்களை திறந்து, அதன் ரகசிய அறைகளில் மறைத்து கடத்தி செல்லவிருந்த இந்திய மதிப்பில் ரூ.20 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகளை டிஆர்ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அத்துடன், சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகளின் பஹ்ரைன் விமான பயணங்களையும் ரத்து செய்தனர்.
பின்னர் பஹ்ரைனுக்கு அமெரிக்க டாலர் நோட்டுகளை கடத்தி செல்லவிருந்த சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகளிடமும் டிஆர்ஐ தனிப்படை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்தனர். இதில், அவர்கள் இருவரும் வெளிநாடுகளுக்கு ஹவாலா பணத்தை கடத்தி செல்லும் கடத்தல் குருவிகள் எனத் தெரியவந்தது. இதனால், அந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர் நோட்டுகள் ஹவாலா பணமாக இருக்கலாம் என்ற கோணத்திலும் டிஆர்ஐ அதிகாரிகளின் விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர், அமெரிக்க டாலர் நோட்டுகளை பஹ்ரைனுக்கு கடத்தி செல்ல முயன்ற சென்னையை சேர்ந்த 2 ஆண் பயணிகளையும் விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகளிடம் டிஆர்ஐ தனிப்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 ஆண் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



