வாஷிங்டன்: கிராண்ட் கேன்யான் தேசிய பூங்காவில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் மாயமாகி உள்ள நிலையில், 62 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ள கிராண்ட் கேன்யான் தேசிய பூங்காவில் உள்ள பிரைட் ஏஞ்சல் மற்றும் பாண்டம் ராஞ்ச் பகுதியில், நேற்று முன்தினம் வெறும் 30 நிமிடங்களில் சுமார் 2.5 சென்டிமீட்டர் அளவுக்கு பலத்த மழை கொட்டித் தீர்த்ததால் கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுமார் 6,000 அடி உயரத்தில் இருந்து கொலராடோ ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய இந்த காட்டாற்று வெள்ளத்தில் நடைபாலங்கள், ராட்சத பாறைகள் மற்றும் தங்குமிட கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டது. அப்போது அங்கு நடைபயணம் மேற்கொண்ட 20 சுற்றுலாப் பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். தகவலறிந்து விரைந்து வந்த தேசிய பூங்கா மீட்புக்குழுவினர் அரிசோனா அதிகாரிகளுடன் இணைந்து ராட்சத ஹெலிகாப்டர்கள் மூலம் பாண்டம் ராஞ்ச் பகுதியில் சிக்கித் தவித்த 62 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் கொலராடோ படகு சவாரி உள்ளிட்ட அனைத்து சுற்றுலா நடவடிக்கைகளையும் உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.



