வாஷிங்டன்: வர்த்தக கப்பல்களை பாதுகாப்பதற்காக அதிபர் டோனல்ட் டிரம்ப் 'ப்ராஜெக்ட் ஃப்ரீடம்' திட்டத்தைத் தொடங்கிய நிலையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதற்றம் இடையில் தீவிரமடைந்தது.
இரு தரப்பினரும் பரஸ்பரம் துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் அமெரிக்க கப்பல்களை தாக்கினால் ஈரான் இந்த பூமியில் இருந்தே மொத்தமாக அகற்றப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்து உள்ளார். போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் பரவலாக பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்காலிகமாக போர்நிறுத்தம் அறிவித்த அமெரிக்கா, ஈரானுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இன்னும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, முடிவும் எட்டப்படவில்லை. இந்த சூழலில் ஹோர்முஸ் நீரிணை அருகே நிறுத்தப்பட்டு உள்ள அமெரிக்க கப்பல்களை தாக்கினால், உலக வரைபடத்திலிருந்தே ஈரான் அகற்றப்படும் என்று டிரம்ப் மிகக்கடுமையாக எச்சரித்து உள்ளார்.
மேலும் வர்த்தகக் கப்பல்களைக் குறிவைத்த ஈரானின் 7 நவீனரக படகுகளை குண்டு வீசி அழித்து விட்டதாகவும், ஹோர்முஸ் நீரிணையில் தென்கொரிய கப்பலை தவிர வேறு எந்த கப்பலுக்கும் சேதம் ஏற்படாமல் பாதுகாத்தோம் என்றும் டிரம்ப் கூறி இருக்கிறார். ஈரான் மீதான அமரிக்காவின் தாக்குதல் எச்சரிக்கையால், மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.



