அமெரிக்கா-கனடா எல்லையில் பயங்கர நிலநடுக்கம்: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்ப்பு
அலாஸ்கா: அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் நேற்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.0 அலகுகளாகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது. அலாஸ்காவின் ஜூனோ நகரில் இருந்து வடமேற்கே சுமார் 370 கிலோமீட்டர் தொலைவிலும், கனடாவின் வைட்ஹார்ஸ் பகுதியில் இருந்து மேற்கே 250 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது.
பூமிக்கடியில் வெறும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நடுக்கம் மையம் கொண்டிருந்தது. சக்திவாய்ந்த நிலநடுக்கமாக இது பதிவானாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இதுகுறித்து கனடா இயற்கை வளத்துறையின் நிலநடுக்கவியல் ஆய்வாளர் அலிசன் பேர்ட் கூறுகையில், ‘மலைப்பாங்கான மற்றும் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகளின் சுவர்கள் மற்றும் அலமாரிகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. அதிர்ஷ்டவசமாக கட்டிடங்களுக்கு எந்தவிதமான கட்டமைப்பு பாதிப்புகளோ அல்லது உயிர் சேதங்களோ ஏற்படவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.