Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

அமெரிக்க இடைத்தேர்தல் டிரம்பின் குடியரசுக் கட்சி படுதோல்வி: செனட், பிரதிநிதி சபைகளை ஜனநாயக கட்சி கைப்பற்றியது

வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு நடந்த இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சி இரு அவைகளிலும் படுதோல்வியை சந்தித்தது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி செனட், பிரதிநிதிகள் ஆகிய இரு அவைகளையும் கைப்பற்றியது. மேலும், பல மாகாணங்களின் ஆளுநர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்காவை தாண்டி உலகளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த 2024ல் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல அதிரடியான முடிவுகளை எடுத்தார். உலக நாடுகளுக்கு வர்த்தக வரி, குடியேற்ற கொள்கைகள் உள்ளிட்டவற்றில் பல பாதகமான கொள்கைகளை புகுத்திய டிரம்ப், இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தொடுத்த போரால் உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இது உலக நாடுகளை மட்டுமின்றி அமெரிக்காவிலும் எரிபொருள் விலையேற்றத்திற்கு வழிவகுத்து மக்களின் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்தன.

இதனால் அதிபர் டிரம்ப் ஆட்சியில் மக்கள் மிகுந்த அதிருப்தி அடைந்த சூழலில், நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் மற்றும் கீழவையான பிரதிநிதிகள் அவைக்கான இடைக்கால தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. பிரதிநிதிகள் சபையில் மொத்தமுள்ள 435 இடங்களுக்கும், செனட் சபையில் 100ல் 35 இடங்களுக்கும் தேர்தல் நடந்தது. பிரதிநிதிகள் அவையில் 218-214 என்ற மிக சிறிய பெரும்பான்மையும், செனட் அவையில் 53-47 என்ற பலத்தையும் டிரம்பின் ஆளும் குடியரசு கட்சி முன்பு பெற்றிருந்தது.

இந்த பெரும்பான்மையை தக்க வைக்க அதிபர் டிரம்ப் சூறாவளி பிரசாரம் செய்த நிலையில், இந்திய நேரப்படி நேற்று அதிகாலை வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், ஏற்கனவே கருத்துக்கணிப்புகளில் கணிக்கப்பட்டபடி, எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி பெரும் வெற்றியை ருசித்தது. அதிபர் டிரம்ப் மீதான அதிருப்தியில் இருந்த அமெரிக்கர்கள் அவரது ஆளும் குடியரசு கட்சிக்கு சம்மட்டி அடி கொடுத்தனர்.

டெக்சாஸ், மெய்ன், தெற்கு கரோலினா, வடக்கு கரோலினா, கன்சாஸ் மற்றும் அயோவா ஆகிய டிரம்ப் தீவிர பிரசாரம் செய்த மாகாணங்களில் செனட் தொகுதிகளில் குடியரசு கட்சி மண்ணை கவ்வியது. செனட் சபையில் பெரும்பான்மைக்கு 51 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயக கட்சி 54 இடங்களைக் கைப்பற்றியது. குடியரசு கட்சியின் எண்ணிக்கை 44 ஆக சுருங்கியது. 2 இடங்களில் வென்ற சுயேச்சைகள் ஜனநாயக கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மைக்கு 218 இடங்கள் தேவை என்ற நிலையில் ஜனநாயக கட்சி 228 இடங்களை கைப்பற்றி 35 இடங்களில் முன்னிலை வகித்தது. குடியரசு கட்சி 139 இடங்களை கைப்பற்றி 33 இடங்களில் முன்னிலை வகித்தது. இதுமட்டுமின்றி 36 மாகாணங்களில் நடந்த ஆளுநர் தேர்தலிலும் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்தது. அதிபர் டிரம்பின் கோட்டைகளாக கருதப்பட்ட டெக்சாஸ், ஜார்ஜியா மற்றும் அயோவா ஆகிய மாகாணங்களில் குடியரசு கட்சி ஆளுநர் பதவிகளை ஜனநாயக கட்சியிடம் இழந்து அதிர்ச்சி தோல்வியை தழுவியுள்ளது.

அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘ஜனநாயக கட்சிக்கு வாழ்த்துகள். நாட்டின் நன்மைக்காக அவர்களுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்’’ என்றார். அதே சமயம் தனது வழக்கமான பாணியில் தோல்விக்கு பிறர் மீது பழிசுமத்தும் வகையில், ‘‘இத்தேர்தலில் நான் நேரடியாக போட்டியிடாததே தோல்விக்கு காரணம். ஒருவேளை நான் இருந்திருந்தால் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றிருப்போம்’’ என ட்ரூத் சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.

குடியரசு கட்சியின் மூத்த தலைவர் கிறிஸ் கிறிஸ்டி அளித்த பேட்டியில், ‘‘டிரம்பின் சகாப்தம் முடிந்துவிட்டது’’ என்றார். அமெரிக்காவின் அடுத்த 2 ஆண்டு கால ஆட்சியை இந்த தேர்தல் தான் முடிவு செய்கிறது. பொதுவாக, நாடாளுமன்ற தேர்தலில் கோட்டை விட்ட அமெரிக்க அதிபர்கள் அடுத்ததாக வெளியுறவு கொள்கைகளில் வீரத்தை காட்டுவது வழக்கம். எனவே இந்த தேர்தல் முடிவுகள், அமெரிக்காவில் மட்டுமின்றி உலகளவிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* வரலாறு படைத்த வேட்பாளர்கள்

முதல் தன்பாலின ஈர்ப்பாளர் செனட்டர்: நியூ ஹாம்ப்ஷயர் மாகாணத்தில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் கிறிஸ் பாப்பாஸ், குடியரசுக் கட்சியின் ஜான் சுனுனுவை வீழ்த்தி, அமெரிக்க செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தன்பாலின ஈர்ப்பாளர் செனட்டர் ஆனார்.

முதல் கறுப்பின பெண் ஆளுநர்: பாரம்பரியமாக குடியரசுக் கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட ஜார்ஜியா மாகாணத்தில், ஜனநாயகக் கட்சியின் கீஷா லான்ஸ் பாட்டம்ஸ் வெற்றி பெற்று, அம்மாகாணத்தின் முதல் கறுப்பின பெண் ஆளுநர் என்ற புதிய வரலாற்றை படைத்துள்ளார்.

முதல் லத்தீன் பெண் ஆளுநர்: டெக்சாஸ் மாகாண ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் ஜினா ஹினோஜோசா தற்போதைய ஆளுநர் கிரெக் அபோட்டை வீழ்த்தி, டெக்சாஸின் முதல் லத்தீன் ஆளுநராகப் பொறுப்பேற்கிறார்.

முதல் பூர்வகுடி அமெரிக்க பெண் ஆளுநர்: நியூ மெக்சிகோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் டெப் ஹாலாண்ட் வெற்றி பெற்று, அமெரிக்க வரலாற்றில் ஆளுநர் பதவியைப் பிடிக்கும் முதல் பூர்வகுடி அமெரிக்கப் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

முதல் திருநங்கை மற்றும் நான்-பைனரி வெற்றிகள்: டெலாவேர் மாகாணத்திலிருந்து நாட்டின் முதல் திருநங்கை நாடாளுமன்ற உறுப்பினரான சாரா மெக்பிரைட் மீண்டும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஜார்ஜியா மாநில சட்டசபைக்கு முதல் திருநங்கை மற்றும் நான்-பைனரி உறுப்பினராக பென்ட்லி ஹட்ஜின்ஸ் தேர்வாகியுள்ளார்.

* ‘ப்ரோ… ஞானேஷை எனக்கு கொடுங்க’

இந்தியாவில் வாக்கு திருட்டு விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஞானேஷ் குமாரை வைத்து கிண்டல், நையாண்டி மீம்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே ‘ஞானேஷ் குமார் இருந்திருந்தால், டிரம்புக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது’’ என கூறியிருந்தார்.

ஒரு பயனர், பிரதமர் மோடியின் அறைக்குள் டிரம்ப் நுழைவது போன்ற மீம் ஒன்றை பகிர்ந்து, அதில் ‘ப்ரோ, எனக்கு ஞானேஷைக் கொடுங்க’ என கேட்பது போல் கிண்டல் செய்துள்ளார். ‘டிரம்ப் வேண்டுகோளின்படி, தேர்தல் அதிகாரிகளுக்கு பாரபட்சமின்றி தேர்தல்களை நடத்துவது குறித்து பயிற்சி அளிக்க ஞானேஷ் குமார் அமெரிக்காவுக்கு பயணம் செய்வார் என்று கூறப்படுகிறது,” என்று மற்றொரு பதிவு கூறியது.

சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பிரசாந்த் பூஷண், பிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாக, மோடி பேசுவது போன்று சித்தரித்த பதிவில், ‘‘மோடி: ‘மன்னிக்கவும் பிரண்ட் என்னால் ஞானேஷை அனுப்ப முடியாமல் போய்விட்டது! இங்கிருக்கும் மக்கள் அவரை வீட்டிற்குள்ளேயே முடக்கிவிட்டார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார்.

* இந்தியாவுக்கு சாதகமா?

அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவு இந்தியாவிற்கு சில சாதகமான வாய்ப்புகளையும், அதே நேரத்தில் புதிய உலகளாவிய சவால்களையும் கொண்டு வந்துள்ளது. அதிபர் டிரம்ப் மற்ற நாடுகளுக்கு வரி விதிக்கும் கொள்கையில் தீவிரமாக இருந்தார். தற்போது நாடாளுமன்றம் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வருவதால், டிரம்பின் தன்னிச்சையான வர்த்தக மற்றும் வரிவிதிப்புக் கொள்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

இது இந்தியாவிற்கு பெரிய நிம்மதியைத் தரும். மேலும், சீனா, ரஷ்யா, ஈரானுடனான வெளியுறவு கொள்கைகளில் டிரம்ப் தோல்வியை சந்தித்துள்ளதால் அதை ஈடுகட்ட இந்தியாவோடு நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தங்களை விரைவாக முடிக்க பேச்சுவார்த்தைகளை முடுக்கிவிடலாம். இதை இந்தியா தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், ஜனநாயகக் கட்சியின் வருகையால் எச்-1பி விசா விதிமுறைகள், செயற்கை நுண்ணறிவு கொள்கைகள் மற்றும் தரவு மேலாண்மை ஆகியவற்றில் நாடாளுமன்றத்தின் கூடுதல் கண்காணிப்பு இருக்கும். இது இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு தற்காலிக நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தலாம்.

* தோற்றவர்கள்

குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட சில இந்திய வம்சாளிகள் மண்ணை கவ்வி உள்ளனர். அதிபர் டிரம்பின் ஆதரவைப் பெற்ற இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி, ஓஹியோ மாகாண ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டனிடம் தோல்வியடைந்தார்.

வட கரோலினாவின் 4வது நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில், குடியரசுக் கட்சியின் மகேஷ் கனோர்கர், ஜனநாயகக் கட்சியின் தற்போதைய பிரதிநிதி வலேரி பூஷியிடம் தோல்வியடைந்தார். குறிப்பிடத்தக்க இந்திய-அமெரிக்க பெண் அரசியல்வாதியான சரிதா மோமதிரெட்டி நியூயார்க் மாகாணத்தின் தலைமை அரசு வழக்கறிஞர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவரும் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்டவர்.

* டிரம்பின் ஆயுதம் வீட்டோ அதிகாரம்

இடைக்கால தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி தோல்வி அடைந்தால் அதிபர் டிரம்ப் இனி தனது விருப்பப்படி முடிவுகளை எடுப்பது கடுமையாக கட்டுப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் அவரால் புதிய சட்டங்களை இயற்ற முடியாது.

இனி டிரம்ப் பயன்படுத்தக்கூடிய ஒரே ஆயுதம் நிர்வாக உத்தரவுகள் மற்றும் நாடாளுமன்ற மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் மட்டுமே. தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘வீட்டோ’ என்று எழுதப்பட்ட சிவப்பு தொப்பியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

* 100 ஆண்டுகளில் முதல் சாதனை

கன்சாஸ் மாகாண செனட் தேர்தலில், பாதிரியாரும் அரசியல்வாதியுமான ஆடம் ஹாமில்டன் வெற்றி பெற்றுள்ளார். இம்மாகாணத்தில் கடந்த 100 ஆண்டுகளில் ஜனநாயகக் கட்சி செனட் இடத்தைக் கைப்பற்றுவது இதுவே முதல் முறையாகும். இதே போல, டெக்சாஸ் செனட் தேர்தலில் கென் பாக்ஸ்டனை வீழ்த்தி ஜனநாயகக் கட்சியின் ஜேம்ஸ் தலரிகோ வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் 40 ஆண்டுகளில் முதன்முறையாக டெக்சாஸ் மாகாணம் ஒரு ஜனநாயகக் கட்சி உறுப்பினரை செனட் சபைக்கு அனுப்பி உள்ளது.

* முதல் முஸ்லிம் செனட்டர்

அமெரிக்க வரலாற்றிலேயே முதன்முறையாகச் செனட் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லிம் அமெரிக்கர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜனநாயகக் கட்சியின் அப்துல் எல்-சயீத் படைத்துள்ளார். மிச்சிகன் மாகாண செனட் தேர்தலில் போட்டியிட்ட அவர், குடியரசு கட்சியின் மைக் ரோஜர்ஸை வீழ்த்தி இந்த அபார வெற்றியை பெற்றுள்ளார்.

தீவிர அரசியல் போட்டிகள் மற்றும் இஸ்லாமோபோபியா சார்ந்த கடுமையான அவதூறு தாக்குதல்களைத் தாண்டி, இவர் பெற்றுள்ள இந்த வெற்றி அமெரிக்க நாடாளுமன்றத்தின் பன்முகத்தன்மைக்கான முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.