Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன், குவைத் மீது தாக்குதல் ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது: அதிபர் டிரம்ப் திடீர் அறிவிப்பால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்

வாஷிங்டன்: ஹார்முஸ் நீரிணையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 3 கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறியதை தொடர்ந்து நேற்று அதிகாலை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து ஈரானுடனான போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே பல மாதங்களாக நீடித்து வந்த மோதலைத் தொடர்ந்து, இரு நாடுகளும் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் அமைதி உடன்படிக்கையை எட்டி போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இதன் அடிப்படையில் ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய் இறக்குமதி தடையிலிருந்து தற்காலிக விலக்கு அளிக்கப்பட்டு, ஆகஸ்ட் 21ம் தேதி வரை சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த சலுகை, ஈரானில் இருந்து 10.5 சதவீதம் அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்த இந்தியா போன்ற நாடுகளுக்கு 60 முதல் 90 நாட்கள் வரை கூடுதல் கடன் கால அவகாசத்துடன் எண்ணெய் வாங்க பெரிதும் உதவியாக இருந்தது.

இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்தியாவுக்கு எரிசக்தி ஏற்றிச் சென்ற கத்தார் கப்பல் உட்பட 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா நேற்று அதிகாலை தாக்குதலை முன்னெடுத்தது. வணிக கப்பல்களை குறிவைத்து தாக்கியதற்காக கடுமையான விளைவுகளை சந்திக்கச் செய்யும் வகையில் அமெரிக்க படைகள் இந்த தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

வான்பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் ஈரானின் துணை ராணுவப் பிரிவான ரெவல்யூஷனரி கார்ட் பயன்படுத்தும் 60க்கும் மேற்பட்ட சிறிய படகுகள் உள்ளிட்ட ஈரான் இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இதற்கு பதிலடியாக ஈரான் ராணுவம் அமெரிக்க கடற்படையின் 5வது படைப்பிரிவு அமைந்துள்ள பஹ்ரைன் மற்றும் அமெரிக்க ராணுவப் படைகள் அமைந்துள்ள குவைத் ஆகிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

இதனிடையே துருக்கியின் அங்காராவில் நடந்த இரண்டு நாள் நேட்டோ உச்சிமாநாட்டின் இடையே பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், “ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை முடிந்துவிட்டது. நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க தரப்பு தொடர்ந்து நடத்தலாம். ஆனால், அது நேரத்தை வீணடிக்கும் செயல்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து, மத்திய கிழக்கில் மீண்டும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதிபர் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. உலகெங்கும் பங்கு சந்தைகளிலும் பங்குகள் விலை கடும் வீழ்ச்சியடைந்தன.

* ஈரான் எண்ணெய் இறக்குமதி சலுகை ரத்து

போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவிட்டதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் ஈரான் மீதான எண்ணெய் விற்பனைக்கான உரிமத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இடைக்கால ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் எண்ணெய் விற்பனைக்கு அங்கீகாரம் அளித்திருந்த உரிமத்தை அமெரிக்கா ரத்து செய்தது. பல ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக அமெரிக்க டாலர்களுக்கு வெளிப்படையாக எண்ணெய் விற்பனை செய்வதற்கு ஈரானுக்கு அது அனுமதி அளித்திருந்தது.

தடை செய்யப்பட்ட கச்சா எண்ணெயை சந்தைவிலையை விடக் குறைந்த விலையில் சீனாவுக்கு விற்பனை செய்வதாக ஈரான் மீது நீண்ட காலமாக சந்தேகம் நிலவி வந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்க அதிகாரிகள், ‘இந்த ஒப்பந்தம் முற்றிலும் செயல்பாட்டின் அடிப்படையிலானது. ஈரான் தனது நன்னடத்தையை நிரூபித்தால் மட்டுமே சலுகைகளைப் பெற முடியும்’ என்று எச்சரித்துள்ளனர்.