Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடும் தாக்குதல்: வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரிப்பு

நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையே போர் கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி நடந்து வருகிறது. பிரபல வணிகப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றம் காரணமாக உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. உலக நாடுகளின் அழுத்தத்தால் ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா நிறுத்தி மத்தியஸ்த நாடுகளின் உதவியுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

இதனிடையே இம்மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளை மீறி ஹார்முஸ் நீரிணையை கடக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. ஈரான் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், தற்காலிகமாக தடை விதித்திருந்தார். இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஈரான் மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி அதற்கான ஆதாரத்தை சமர்பித்தார். இருப்பினும் பேச்சுவார்த்தை மூலமாகவே போரை முடிவுக்கு கொண்டு வருவதில் உறுதியுடன் இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய சமயத்தில் ஹார்முஸ் நீரிணையில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க மத்திய கட்டளைக்கு சொந்தமான போர்க்கப்பல்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் வீசிய ஏவுகணைகளை வானிலேயே தகர்த்தெறிந்ததாக அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்தது. ஜோர்டான், சவுதி அரேபியா, ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க போர் படைத்தளங்களை குறி வைத்து ஈரான் தாக்கியது. இதனை டிரோன்கள் வீசி நடுவானில் தகர்க்கப்பட்டன.

இதற்கிடையே ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் இருந்து சவுதி அரேபியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு, அமெரிக்காவின் உதவியுடன் சவுதி அரேபிய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். இதில் 20 பேர் உயிரிழந்தனர். ஈரான் மீதான திட்டமிட்ட தாக்குதல்களை டிரம்ப் நிறுத்திய பின்னர், அமெரிக்க ராணுவத்தளம் மீது ஈரான் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும். இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்திருந்தார். அடுத்த சில மணி நேரங்களில், ஈரானில் புதிய வான்வழி தாக்குதல்களை அமெரிக்கா நடத்தியுள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘தனது இறையாண்மைக்கு எதிரான எந்த நடவடிக்கைக்கும் தக்க பதிலடி வழங்கப்படும்’ என்று ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோதல் சர்வதேச எண்ணெய் சந்தை மற்றும் பிராந்திய பாதுகாப்பில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.