நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் விளையாட, முதல் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் (ஜெர்மனி) தகுதி பெற்றார். காலிறுதியில் நெதர்லாந்தின் வான் டி ஸாண்ட்ஸ்சுல்ப் (30 வயது, 70வது ரேங்க்) உடன் மோதிய ஸ்வெரவ் (2வது ரேங்க், 29 வயது) 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். 2வது செட்டில் வான் சற்று நெருக்கடி கொடுத்தாலும், அவரது சர்வீஸ் ஆட்டத்தை முறியடித்த ஸ்வெரவ் 7-5 என வென்று முன்னிலையை அதிகரித்தார்.
அதே வேகத்துடன் 3வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்வெரவ் 6-2, 7-5, 6-1 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 17 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் ரஷ்யாவின் கரென் கச்சனோவ் 6-2, 7-5, 3-2 என முன்னிலை வகித்த நிலையில், எதிர்த்து விளையாடிய பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் பிளாக்ஸ் காயம் காரணமாக விலகினார். இதைத் தொடர்ந்து கச்சனோவ் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அரையிறுதியில் ஸ்வெரவ் - கச்சனோவ் மோதுகின்றனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் கஜகஸ்தான் நட்சத்திரம் எலனா ரைபாகினா 3-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் சீனாவின் கின்வென் ஸெங்கை வீழ்த்தினார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் கோகோ காஃப் 2-6, 7-6 (9-7), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 19 நிமிடம் போராடி ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவாவை வென்றார்.அரையிறுதியில் ரைபாகினா - கோகோ காஃப் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் செக் குடியரசின் சினியகோவா - டவுன்செண்ட் (அமெரிக்கா) ஜோடி, அமெரிக்காவின் ஆஷ்லின் குரூகர் - ராபின் மான்ட்கோமெரி ஜோடியுடன் மோதுகிறது.

