அமெரிக்க இடைத்தேர்தலை சுட்டிக்காட்டி காங். சாடல்; ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயக ஆயுதத்தை பலவீனப்படுத்தும்
புதுடெல்லி: அமெரிக்க தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி காங். கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது எக்ஸ் பக்க பதிவில், ‘’இடைத்தேர்தல்கள் ஆளும்கட்சி மீதான மக்களின் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்த எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மோடி அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை அமல்படுத்தப்பட்டால், அது ஆளும்கட்சியை மக்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தையும், இடைக்காலத்தில் பொறுப்புக்கூற வைக்கும் இந்த ஜனநாயக ஆயுதத்தையும் முற்றிலுமாக முடக்கிவிடும் என்று சாடியுள்ளார்.
அமெரிக்க மக்கள் அந்நாட்டின் அரசியல் சாசன ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான ஜனநாயகச் சமநிலையை மீண்டும் மீட்டெடுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ம் ஆண்டு முதல் ஜனநாயகச் சமநிலை ஆபத்தான முறையில் சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங். கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான கே.சி. வேணுகோபால், ‘’ மக்களின் ஒருங்கிணைந்த சக்தியால் சர்வாதிகாரப் போக்கை வீழ்த்த முடியும் என்பதை அமெரிக்க தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும், அரசாங்கங்களின் அதிகாரத் திமிரைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற இடைக்காலத் தேர்தல்கள் உதவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


