Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்காவின் முக்கிய முடிவு: உலக முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு

அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவால் உலக முதலீட்டாளர்கள் நிம்மதி பெருமூச்சு விடும் நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகளாவிய வர்த்தக பரிவர்த்தனைகளில் 85% முதல் 90% வரை அமெரிக்க டாலர் மூலமே நடைபெறுகிறது. இதன் காரணமாக உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாணயமாக அமெரிக்க டாலர் கருதப்படுகிறது.

அமெரிக்க டாலர் இருந்தால் மட்டுமே பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்யும் சூழல் இருப்பதால், பல்வேறு நாடுகளும் தனியார் நிறுவனங்களும் டாலரை வாங்கி குவித்து வருகின்றன. அதேபோல், அமெரிக்க டாலரை வெளியிடும் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பல்வேறு வகையான பத்திரங்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்தப் பத்திரங்களை வாங்கியவர்களுக்கு ஆண்டுதோறும் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி வழங்கி வருவதால், அவற்றுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பிலான அமெரிக்க பத்திரங்களை வாங்கி வருகின்றன.

இந்தச் சூழலில், கடந்த சில ஆண்டுகளாக டாலருக்கு மாற்றாக சீனா, இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் தங்கள் சொந்த நாணயங்களில் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில், அமெரிக்காவும் பல்வேறு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதுபோன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கான தேவை படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் சுங்க வரிகளை விதித்ததால், டாலர் மீதான நம்பிக்கையை பல நாடுகள் இழந்தன. இதன் விளைவாக, தங்கள் வசமுள்ள அமெரிக்க டாலர் பத்திரங்களை சர்வதேச சந்தையில் விற்று, அதற்குப் பதிலாக தங்கத்தை வாங்கி குவிக்கத் தொடங்கின. இதனால் உலகளவில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததுடன், டாலரின் மதிப்பும் சரிவை சந்தித்தது.

இந்தச் சூழலில், அமெரிக்காவின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால், அவ்வாறு செய்தால் அமெரிக்க டாலரின் மதிப்பும் அதற்கான தேவையும் மேலும் குறையக்கூடும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.

மேலும், வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டால் அமெரிக்க அரசுப் பத்திரங்களுக்கு வழங்க வேண்டிய வட்டியும் குறையும். இதன் காரணமாக உலக நாடுகள் அமெரிக்க பத்திரங்களை மேலும் விற்கத் தொடங்கும் அபாயம் இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்தனர்.

இந்த நிலையில், நேற்று பெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், கொள்கைக் குழுவின் 12 உறுப்பினர்களில் 9 பேர் தற்போதைய வட்டி விகிதத்தை மாற்றாமல் தொடர வேண்டும் என்று வாக்களித்தனர். மீதமுள்ள 3 உறுப்பினர்கள், பணவீக்கம் இன்னும் அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி, வட்டி விகிதத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்று வாக்களித்தனர்.

இதையடுத்து, அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி நாட்டின் வட்டி விகிதத்தை 3.50% முதல் 3.75% என்ற அளவிலேயே மாற்றமின்றி தொடரும் என்று அறிவித்துள்ளது. இந்த முடிவால், அமெரிக்க டாலர் மற்றும் அமெரிக்க அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களும், உலக நாடுகளும் நிம்மதி அடைந்துள்ளன. அதேநேரத்தில், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெடரல் ரிசர்வ் வங்கி மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.