அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் ஆண்டுதோறும் ₹69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்நாட்டு அரசு தகவல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களால் அந்நாட்டுக்கு ஆண்டுதோறும் ₹69,000 கோடி வருவாய் கிடைப்பதாக அந்நாட்டு அரசு கணக்கிட்டுள்ளது. அமெரிக்கா முழுவதும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அமெரிக்க கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் மிகச் சிறப்பாக செயல்படும் இந்திய மாணவ, மாணவியரை அந்த நாட்டு அரசு தக்க வைத்துக் கொள்வதால் இந்த வளர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான இந்திய பிரதமர் மோடியின் சந்திப்பிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு அறிக்கையில், உலகளாவிய பணியிடத்தை உருவாக்குவதை ஊக்குவிப்பதற்காக உகந்த கட்டமைப்புகளை உருவாக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை அதிபர் டிரம்பும், பிரதமர் மோடியும் குறிப்பிட்டனர்.
மேலும், 3,00,000 க்கும் மேற்பட்ட வலுவான இந்திய மாணவர் சமூகம் அமெரிக்க பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 8 பில்லியன் டாலர்களுக்கு மேல் பங்களிப்பதாகவும், பல நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதாகவும் குறிப்பிட்டனர். மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஊழியர்களின் திறமை இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் பயனளித்துள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


