தமிழகத்தையே ஆயிரம் கோடி கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கு உலுக்கியுள்ளது.மதுரை மேலூரை தலைமையிடமாக கொண்டு, எப்க்யூஎல் என்ற பெயரில் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்குமென கூறி, இந்நிறுவனத்தின் ஏஜென்ட்கள், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோரை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். இதனை நம்பி பலரும் பணம் முதலீடு செய்துள்ளனர். துவக்கத்தில் முதலீடு செய்தவர்களுக்கு முறையாக பணம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக முதலீட்டு பணத்திற்கு இரட்டிப்பு பணம் வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் அலங்காநல்லூர், மேலூர், நத்தம் பகுதிகளில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மோசடியில் சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் கிரிப்டோ கரன்சி மோசடி நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும், இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட ரஞ்சித்துக்கு, சர்வதேச சைபர்கிரைம் மோசடி கும்பலுடன் தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த மிகப்பெரிய நிதி மோசடி தொடர்பான வழக்குகளின் தீவிரத்தன்மை கருதி, தமிழக டிஜிபி உத்தரவின்பேரில் வழக்குகள் அனைத்தும் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மோசடி தொடர்பாக ஏஜென்ட்கள் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் நத்தத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஆக.31ம் தேதி மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டார். ஆனால், அந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக உறவினர்கள் மறியலிலும் ஈடுபட்டனர். இந்த எப்.க்யூ.எல் மோசடி விவகாரம் மதுரையை மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக வெளிப்படையாக விளம்பரம் செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். அதிலும், குறிப்பாக நகர்ப்புறத்தில் இது போன்று மோசடியில் ஈடுபட்டால் சிக்கிக் கொள்வோம் என்று தெரிந்து, எளிய பின்னணியை கொண்ட கிராம மக்களிடமே மோசடி நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
சட்டம், ஒழுங்கை தீவிரமாக கண்காணித்து வரும் போலீசார், இதனை தொடக்கத்திலேயே கண்டறிந்து தடுத்து நிறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவாக தற்போது பெரும் மோசடி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த மோசடி குறித்து தமிழக முதல்வரோ, பொறுப்பு அமைச்சர்களோ வாய் திறக்காமல் மவுனம் காக்கின்றனர். மகனுக்கு தெரியாமல் அப்பா, மகளுக்கு தெரியாமல் அம்மா, கணவனுக்கு தெரியாமல் மனைவி என மாறி மாறி எப்படியாவது முன்னேறி விட மாட்டோமா என்ற கனவில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. பணத்தை இழந்து கதறி துடிப்போரின் காட்சிகள் காண்போரை கலங்கச் செய்கின்றன.
தமிழக அரசு இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்தி மக்கள் இழந்த பணத்தை மீட்டுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைனில் முதலீடு செய்தால் லாபம், செயலியில் பணம் கட்டினால் தினசரி வருமானம் கிடைக்கும் என தினந்தோறும் புதிய புதிய மோசடிகள் இணைய உலகில் அரங்கேறி வருகின்றன. எனவே, ஒன்றிய, மாநில அரசுகள் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுவோரை கண்காணித்து, தகுந்த தண்டனையை பெற்றுத்தர வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும். மேலும், எப்க்யூஎல் மோசடியில் பாதிக்கப்பட்டோருக்கு முதலீடு பணத்தை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது.



