Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி தமிழக மாணவர்கள் நேர்முக தேர்வுக்கான பயிற்சி பெற ரூ.50,000 ஊக்கத்தொகை: 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் நேர்முக தேர்விற்கான பயிற்சி பெற நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-26க்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட் உரையில், ஒன்றிய குடிமைப் பணி தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து தேர்ச்சி பெறுபவர்களின் எண்ணிக்கையை உயர்த்திட, ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு,

அவர்கள் முதல்நிலை தேர்வுகளுக்கு தயாராகும் வகையில், 10 மாதங்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 25,000 ரூபாயும், ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது எனவும், இதை தொடர்ந்து, முதன்மை தேர்வில் வெற்றி பெற்று நேர்முக தேர்விற்கு தயாராகும் இளைஞர்களுக்கு ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், இத்திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, 2025ம் ஆண்டின் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 659 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. தற்போது, (11.11.2025) யுபிஎஸ்சி குடிமை பணிகள் முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், நான் முதல்வன் யு.பி.எஸ்.சி குடிமைப் பணிகள் முதன்மை தேர்வுக்கான ஊக்கத்தொகை பெற்ற 659 பயனாளிகளில், 155 பேர் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் 87 பேர் அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து, 2025ம் ஆண்டின் யுபிஎஸ்சி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஆர்வலர்களுக்கு நேர்முக தேர்விற்கான பயிற்சி பெற தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகையாக நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யுபிஎஸ்சி குடிமை பணிகள் முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் https://naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையை படித்து பார்த்து, 13.11.2025 (இன்று) முதல் 24.11.2025 வரை விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.