புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள மாதாந்திர முன்னறிவிப்பு அறிக்கையில், ஆகஸ்ட் மாதத்தின் சராசரி வெப்பநிலை 28.01 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியுள்ளது. ஆனால், இயல்பான வெப்பஅளவு 27.34 டிகிரி செல்சியஸ் ஆகும். அதே போல், அதேபோல, குறைந்தபட்ச சராசரி வெப்பநிலையும் 24.36 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருக்கிறது. இதுவும் இயல்பை விட அதிகம். 1901-க்குப் பிறகு 125 ஆண்டுகள் கழித்து இந்த ஆகஸ்ட் மாதத்தில் பதிவான வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
எல் நினோ தாக்கம்: மழைப்பொழிவைப் பொறுத்தவரை, ஆகஸ்ட் மாதத்தில் 213.3 மி.மீ. என்ற அளவில் மிகக் குறைவான மழையே பெய்துள்ளது. இது 2001-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான 7-வது மிகக் குறைந்த அளவாகும். ஆகஸ்டில் நான்கு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவானாலும், மழைப்பொழிவு சிந்து-கங்கைச் சமவெளிப் பகுதிகளோடு சுருங்கிவிட்டது. பூமத்திய ரேகையை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில் நிலவும் வலுவான ‘எல் நினோ’ விளைவு காரணமாகவே இந்தியாவில் மழைப்பொழிவு குறைந்து, வெப்பம் அதிகரித்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
செப்டம்பரிலும் குறைவான மழை
எல் நினோ நிலை வரும் மாதங்களிலும் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் மாதத்திலும் இயல்பான மழை அளவான 167.9 மி.மீ-ஐ விடக் குறைவாகவே (91 சதவீதத்திற்கும் கீழ்) மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதே சமயம், செப்டம்பரிலும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.



