இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்த தேதிகள் குறித்தாகிவிட்டது. அசாம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு நடந்துவிட்டது. அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சந்தடி சாக்கில் தொகுதி மறுவரைக்கு ஒன்றிய அரசு அவசரம் காட்டுவது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. ஒன்றிய அரசின் இந்த அவசியற்ற அவசரத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா, தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி, கேரள மாநில முதல்வர் பினராய் விஜயன் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் குரல்வளையை நசுக்குவதற்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. வடமாநிலங்களில் தொகுதியை அதிகப்படுத்தி ஒட்டுமொத்த அதிகாரத்தை அங்கே குவித்து கொள்ள அவசரம் காட்டுகிறது. நாடாளுமன்றத்தில் மாநில மக்களின் பிரச்னைகளை பேசுவதற்கு போதிய அவகாசம் வழங்காமல் பாரபட்சம் காட்டும் ஒன்றிய பாஜ அரசு தொகுதி மறுவரைக்கு பிறகு தென்னிந்திய பிரதிநிதிகளை வெறும் எண்ணிக்கையாகத்தான் பார்க்கும்.
குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச நிர்வாகம் எ்ன்ற ஒன்றிய அரசின் முழுக்கத்துக்கே அவர்களது நடவடிக்கை எதிராக அமைந்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த முடிவால் நாடாளுமன்ற செயல்பாடுகளின் தரம் குறையும். மக்கள் வரிப்பணம் வீணாகும். மேலும் இந்தியாவின் பன்முக கூட்டாட்சித் தன்மையை சிறுமைப்படுத்தும் நடவடிக்கையாக இது அமையும். பாஜ தனது ஆதிக்கப்பிடியில் வைத்திருக்கும் மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்தி தென்மாநிலங்களை சிறுமைப்படுத்த திட்டமிட்டு செயல்படுகிறது.
இதை கடுமையாக கண்டித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, இது நடுநிலையான நடவடிக்கையா?. அரசியல் நோக்கம் கொண்ட திட்டமிட்ட கட்டமைப்பு மாற்றம். வடமாநிலங்களில் தொகுதி எண்ணிக்கை இரட்டிப்பாக்கி, தென்மாநிலங்களில் தொகுதி எண்ணிக்கையை 24 சதவீதத்தில் வைத்து மாநிலங்களை விளிம்பு நிலைக்கு தள்ள நினைக்கும் பாஜவின் பிற்போக்கு திட்டமாகும். அதனால் தான் தேர்தல் நடக்கும் சமயத்தில் கட்டாயமாக இ்ந்த திட்டத்தை ஒன்றிய அரசு திணிக்கிறது.
தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாகக் கொள்ளப்போவது எது என்பதிலும் கொஞ்சம் கூட வெளிப்படைத்தன்மை இல்லை. 2021 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா அல்லது மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு முந்தைய காலமான 1971-ஆம் ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா? என்ற தெளிவான அறிவிப்பும் இல்லை. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மீது பெரும் நிதிச்சுமையை ஏற்றும், சட்டமன்றங்களை விரிவாக்கம் செய்ய அல்லது புதிதாகக் கட்டும் நிலைக்குத் தள்ளும்.
இவை அனைத்தும் முறையான கலந்தாலோசனை எதுவுமின்றி நடக்க இருக்கிறது. இது கூட்டுறவுக் கூட்டாட்சியியல் மீதான நேரடித் தாக்குதல். தென்னிந்தியாவில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று 15 ஆண்டாக முயற்சி செய்யும் பாஜ கட்சிக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது. இவர்களது மதவாத சாயம் தென்மாநிலங்களில் எடுபடவே இல்லை. இனியும் எடுபடாது. மக்களிடையே மதம், சாதி வன்மங்களை தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சிகள் வடமாநிலங்களில் வேண்டுமானால் பாஜவுக்கு சாத்தியமாகலாம். தென்மாநில மக்கள் புத்திக்கூர்மை மிகுந்தவர்கள். மதம், சாதியை கடந்து அரசியலை அறிவால் எடைபோடுபவர்கள். என்பதில் சந்தேகமில்லை.
