Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை புதுச்சேரி சட்டசபையை மகளிர் காங்கிரசார் முற்றுகை: கேட்டின் மீது ஏறி குதிக்க முயன்றதால் போலீசாருடன் தள்ளுமுள்ளு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமையை கண்டித்து, சட்டசபையை மகிளா காங்கிரசார் முற்றுகையிட்டனர். சட்டசபைக்குள் நுழைய முயன்றதை போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து வேனில் ஏற்றினர். புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ்-பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இந்த சூழலில் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், அதற்கு நியாயம் கேட்டும் சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மகிளா காங்கிரசார் அறிவித்திருந்தனர். அதன்படி, நேற்று காலை, மகிளா காங்கிரசார் 100க்கும் மேற்பட்டோர் சட்டசபை அருகே (ஆம்பூர் சாலை) ஒன்று திரண்டனர். தொடர்ந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் மகளிர் காங்கிரசார், இளைஞர் காங்கிரசார், மாணவர் காங்கிரசார் என பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, முதல்வரை சந்தித்து மனு அளிக்க திடீரென அங்கிருந்து மகளிர் காங்கிரசார் சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை பார்த்ததும் சட்டசபை காவலர்கள், நுழைவாயில் கேட்டை சாத்தினர்.

முதல்வரை சந்தித்து மனு அளிக்க வந்திருப்பதாக மகளிர் காங்கிரசார் கூறியும் காவலர்கள் அனுமதி மறுத்தனர். இதனால் ஆவேசமடைந்த மகளிர் காங்கிரசார், சட்டசபை நுழைவாயில் கேட் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர், கேட்டை தள்ளியும், ஏறி குதிக்கவும் முயன்றனர்.

தகவலறிந்த பெரியகடை போலீசார், பெண் காவலர்களுடன் வந்தனர். மகளிர் காங்கிரசார், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி கைது செய்து, வேனில் ஏற்றிச் சென்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், முக்கிய நிர்வாகிகள் 10 பேரை மட்டும் முதல்வரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். தொடர்ந்து, சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து மனு அளித்தனர். இச்சம்பவத்தால் சட்டசபை முன்பு சுமார் அரை மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.