டெக்னாலஜி உலகம் வேகமாக மாறிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் பெண்கள் பாரம்பரிய படிப்புகளைத் தாண்டி, எதிர்கால வேலைவாய்ப்புகளையும் தொழில்முனைவு வாய்ப்புகளையும் உருவாக்கும் துறைகளில் அதிகமாக நுழைந்து வருகின்றனர். குறிப்பாக வீட்டிலிருந்தபடியே உலகளாவிய நிறுவனங்களுடன் வேலை செய்யும் வாய்ப்புகளும், தனியாக ஸ்டார்ட்அப் தொடங்கும் வாய்ப்புகளும் அதிகரித்திருப்பதால் சில படிப்புகள் பெண்களுக்குப் பெரும் பலன் தரக்கூடியதாக மாறியுள்ளன.
டெக்னாலஜி உலகம் வேகமாக வளர்ந்து வரும் இந்த காலத்தில் பெண்கள் தேர்வு செய்யும் படிப்புகள் வெறும் பட்டப்படிப்பாக இல்லாமல், எதிர்கால வேலைவாய்ப்பு, பொருளாதார சுதந்திரம், உலகளாவிய வாய்ப்பு மற்றும் தொழில்முனைவு வளர்ச்சியை உருவாக்கும் கருவியாக மாறியுள்ளன. குறிப்பாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதால், பெண்களுக்கு பல புதிய துறைகள் மிகப்பெரிய எதிர்காலத்தை வழங்குகின்றன.
செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் பயிற்சி (Artificial Intelligence & Machine Learning)
மனிதர்களைப் போல சிந்தித்து செயல்படும் மென்பொருட்கள் மற்றும் தானியங்கி அமைப்புகளை உருவாக்கும் துறை இது. சாட் பாட், வாய்ஸ் அஸிஸ்டெண்ட் மருத்துவச் சிகிச்சை இயந்திரங்கள், ஏஐ கண்டெண்ட் உருவாக்கம் போன்ற பல துறைகளில் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கோடிங் மற்றும் தளவாடங்கள் (Coding & Logistics) ஆர்வமுள்ள பெண்களுக்கு இந்தப் படிப்பு மிகச்சிறந்த எதிர்காலத்தை தரக்கூடியது. ஏஐ இன்ஜினியர் , பிராம்ப்ட் இன்ஜினியர், இயந்திரப் பயிற்சி நிபுணர்கள் (Prompt Engineer, Machine Learning Specialist) போன்ற வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
இணைய பாதுகாப்பு மற்றும் எதிக்கல் ஹாக்கிங் (Cyber Security & Ethical Hacking)
இணைய மோசடிகள் மற்றும் அடையாள திருட்டு அதிகரித்து வரும் நிலையில் நிறுவனங்களின் தகவல்களை பாதுகாக்கும் நிபுணர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்துள்ளது. ஹேக்கர்கள், ஆவணப் பாதுகாப்பு அனலிஸ்ட், டிஜிட்டல் பாரன்சிக் நிபுணர் போன்ற பணிகளில் பெண்கள் அதிகமாக நுழைந்து வருகின்றனர். இவற்றில் எல்லாம் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் வாய்ப்புகளும் இதில் அதிகம்.
டேட்டா சயின்ஸ் மற்றும் டேட்டா அனலிட்டிக்ஸ் (Data Science & Data Analytics)
பெரிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் வணிக முடிவுகளை ஆய்வு செய்ய டேட்டா தரவுகளைத்தான் நம்புகின்றன. கணிதம், கணினி புரோகிராமிங் மீது ஆர்வமுள்ள பெண்களுக்கு இது மிகச்சிறந்த துறை. டேட்டா ஆலோசகர், டேட்டா பாதுகாப்பு, காப்புரிமம், உரிமம் பாதுகாப்புகள் போன்ற வேலை வாய்ப்புகள் இதில் கிடைக்கின்றன.
பயனர் அனுபவ வடிவமைப்பு (UI/UX Design)
மொபைல் செயலிகள், இணையம் மற்றும் சாஃப்ட்வேர்களை பயனாளிகள் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கும் துறை இது. கற்பனை திறன் மற்றும் டிசைன் சென்ஸ் உள்ள பெண்களுக்கு இந்தப் படிப்பு மிகவும் பொருத்தமானது. பகுதி நேரம் மற்றும் ரிமோட் வேலை வாய்ப்புகள் இதில் அதிகம்.
டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் கன்டென்ட் திட்டமிடல் (Digital Marketing & Content Strategy)
சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் தொழில்கள் வளர்ச்சியால் இந்தத் துறையின் தேவை வேகமாக உயர்கிறது. சமூக வலைதள மார்க்கெட்டிங், கன் டென் ட் உருவாக்கம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், அதற்கான பேனர்கள், கூப்பன்கள் , விளம்பரங்கள் உருவாக்கம், எடிட்டிங், போன்ற வேலை வாய்ப்புகள் இதில் உள்ளன.
பயோடெக்னாலஜி மற்றும் மரபணு பொறியியல் (Biotechnology & Genetic Engineering)
மரபணு ஆய்வு, புதிய மருந்து கண்டுபிடிப்பு மற்றும் எதிர்கால மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவ ஆராய்ச்சியில் ஆர்வமுள்ள பெண்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும்.
உளவியல் மற்றும் மனநல ஆலோசனை (Psychology & Mental Health Counselling)
கணினி சார்ந்து வேலை பார்க்கும் இளைஞர்கள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கேற்ப மன அழுத்தம், மனநிலை சார்ந்த பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. மனநல விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் ஆலோசகர் மற்றும் தெரபிஸ்ட்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்து வருகிறது. பள்ளிகள், ஐடி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் ஆன்லைன் தெரபி வகுப்புகளில் வேலை வாய்ப்புகள் அதிகம். மனிதர்களுடன் தொடர்பு கொண்டு உதவ விரும்பும் பெண்களுக்கு இந்தத் துறை ஏற்றது. குறிப்பாக பல பெரும் நிறுவனங்கள் மாத சம்பளத்திலேயே மனிதவள குழுவில் ஒரு மனநல ஆலோசகரையும் அமர வைக்கிறார்கள்.
அனிமேஷன், விஎஃப்எக்ஸ் மற்றும் கேமிங் (Animation, VFX & Gaming)
ஓடிடி, சினிமா, வீடியோ கேம், விஷுவல் மீடியம் வளர்ச்சியால் அனிமேஷன் மற்றும் VFX கலைஞர்களுக்கு உலகளவில் தேவை அதிகரித்துள்ளது. கிரியேட்டிவ் திறன் கொண்ட பெண்கள் இந்தத் துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியும்.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் (Renewable Energy & Environmental Science)
சோலார் எனர்ஜி, எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் மின்சார கருவிகள் மீது உலகம் முழுவதும் கவனம் அதிகரித்து வருகிறது. மறுசுழற்சி, நிலைத்தன்மை (Sustainable) துறைகளில் பெண்களுக்கும் அதிக வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
ஃபேஷன் டெக்னாலஜி மற்றும் நிலைத்திருக்கும் ஃபேஷன் (Fashion Technology & Sustainable Fashion)
பாரம்பரிய ஃபேஷன் துறை தாண்டி தற்போது ஏஐ டிசைனிங் (AI Fashion Design), டிஜிட்டல் ஸ்டைலிங் (Digital Styling) மற்றும் நிலைத்தன்மை ஃபேஷன் (Sustainable Fashion) போன்ற புதிய துறைகள் உருவாகியுள்ளன. சமூக வலைதளம், இணைய வாணிகம் வளர்ச்சியால் வீட்டிலிருந்தபடியே தனி ஃபேஷன் பிராண்ட் தொடங்கும் வாய்ப்புகளும் அதிகம்.
கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டெவ்ஒப்ஸ் (Cloud Computing & DevOps)
நிறுவனங்களின் டேட்டா மற்றும் சாஃப்ட்வேர் சேவைகள் தற்போது க்ளவுட் பிளார்ட்ஃபார்ம் (Cloud Platforms) மூலம் இயங்குகின்றன. கூகுள் க்ளவுட், அமேசான், ரெட்டிட் போன்ற தளங்
களில் வேலை செய்யும் நிபுணர்களுக்கு உலகளவில் தேவை அதிகம்.
ரோபோட்டிக்ஸ் மற்றும் தானியக்க தொழில்நுட்பம் (Robotics & Automation)
மனிதர்களின் வேலையைக் குறைக்கும் அனைத்துத் துறையும் எளிதில் வெற்றி பெறும். அந்த வகையில் தொழிற்சாலைகள் முதல் மருத்துவம் வரை மனிதர்களின் வேலைகளை எளிதாக்கும் ரோபாட் சிஸ்டம்ஸ் (Robot Systems) உருவாக்கப்படும் துறை இது. ஆட்டோ மேஷன் இன்ஜினியர், ரொபாடிக்ஸ் புரோக்ராமர் (Robotics Programmer) போன்ற வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகி வருகின்றன.
இன்றைய பெண்கள் தேர்வுசெய்யும் படிப்பு என்பது வெறும் அறிவும், பெயருக்குப் பின்னால் பயன்படுத்தும் பட்டம் மட்டும் அல்ல; அது எதிர்கால வாழ்க்கை முறை, அங்கீகாரம், உலகளாவிய வாய்ப்பு மற்றும் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கும் முதலீடாக மாறியுள்ளது.
- ஷாலினி நியூட்டன்


