Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டுக்கும், மாநில சுயாட்சிக்கும் எதிரானது என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: தமிழ்நாட்டுக்கு, இந்த பட்ஜெட்டில் உரிய இடமோ, மரியாதையோ இல்லை. சிறுபான்மையினரையும் இந்த பட்ஜெட் வஞ்சித்துள்ளது. மொத்தத்தில் சாமானிய குடிமக்களையும் தமிழ்நாட்டு மக்களையும் சிறுபான்மையினரையும் திட்டமிட்டுப் புறக்கணிக்கும் பகட்டு ஆவணமாக ஒன்றிய பட்ஜெட் 2026 அமைந்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக்: ஒன்றிய பட்ஜெட் தமிழகத்தின் தேவைகளை முற்றிலும் புறக்கணித்துள்ளது. இந்த பட்ஜெட் அறிவிப்பு ஒன்றிய பாஜ அரசின் சால்ஜாப்பு அன்றி வேறில்லை. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு, சம நீதி உறுதி செய்யப்பட வேண்டும். மாநிலங்களுடன் கலந்தாலோசித்து ஒன்றிய அரசின் பட்ஜெட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே இதுபோன்ற புறக்கணிப்புகளையும், அரசியல் பழிவாங்கலையும் தடுக்க முடியும். அதை நோக்கிய நகர்வுகளை அனைத்து ஜனநாயக சக்திகளும் முன்னெடுக்க வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய நிதிநிலை அறிக்கை ஒரு சம்பிரதாய அறிக்கையாக, தமிழகத்தை தொடர்ந்து வஞ்சிக்கும் அறிக்கையாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளும் படியான எந்த அறிவிப்பும் இல்லை. நாட்டின் முதுகெலும்பாக விளங்கக்கூடிய விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அது குறித்து உருப்படியான எந்த அறிவிப்பும் வெளியிடாதது ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகும்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், நீண்ட காலமாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை போன்றவை குறித்து எந்த அறிவிப்புகளும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நேரம் என்பதையோ, தமிழ்நாட்டை சேர்ந்தவர் நிதியமைச்சர் என்பதையோ மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருவது கண்டனத்திற்குரியதாகும். மொத்தத்தில் இந்த நிதிநிலை அறிக்கை பெருத்த ஏமாற்றத்திற்குரியதாகும்.