Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசுக்கு பின்னடைவு

நீட் தேர்வு சர்ச்சைகள் மீண்டும் தேசிய அரசியலின் மையமாக மாறியுள்ளன. நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். சமீபத்தில் டெல்லியில் மாணவர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்ததோடு, ஒன்றிய அரசையே உலுக்கி விட்டு ஒய்ந்திருக்கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தீவிர முன்னெடுப்புகளும், சமூக ஆர்வலர் சோனம் வாங்க்சுக் உண்ணாவிரதம் உள்ளிட்ட நிகழ்வுகள், இப்போது ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியை காவு வாங்கி விட்டது.

வினாத்தாள் கசிவு தொடர்பான குற்றச்சாட்டுகள், தேர்வின் வெளிப்படைத்தன்மை குறித்த சந்தேகங்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய அச்சம் ஆகியவை இந்த விவகாரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாக வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் புதிய மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. தேர்வு முறையில் நம்பிக்கையை மீட்டெடுக்க இது ஒரு முயற்சியாக இருக்க கூடும்.

ஆனால் மசோதா தாக்கல் செய்யப்படுவதால் மட்டுமே எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு அடங்கும் என்று கூற முடியாது. நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் அல்லது மாநிலங்களுக்கு தனித்தேர்வு நடத்தும் அதிகாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை பல மாநிலங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. எனவே நாடாளுமன்றத்தில் இன்றும் கடும் அமளி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

எப்போதுமே எதிர்கட்சிகளை பந்தாட நினைக்கும் ஆளும் பாஜ தரப்பு சமீபகாலமாக, மாணவர்களின் போராட்டம் காரணமாக பின்னடைவை எதிர்கொண்டு வருகிறது. நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் தொடர்ந்து குரல் கொடுத்தபோதும், அதை காதிலே வாங்காத ஒன்றிய அரசு, இப்போது டெல்லியில் நடந்த போராட்டங்களால் தலைகுனிய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுபோல் கடந்த 2020ம் ஆண்டு 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராட்டம் நடத்தினர். இறுதியில் வேறு வழியின்றி ஒன்றிய அரசு அந்த சட்டங்களை வாபஸ் பெற்றது. அது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகவும், ஒன்றிய அரசின் தோல்வியாகவும் கருதப்பட்டது. அதேபோல் தற்போது நீட் தேர்வு விவகாரத்திலும் ஒன்றிய அரசின் முகத்தில் கரி பூசப்பட்டுள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் சமீபகாலமாக ஒன்றிய அரசு தீவிர அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. இப்பிரச்னையை தீர்க்க முடியாமல் போராட்ட களத்தில் அந்நிய சக்திகள் ஊடுருவியதாக திசை திருப்பவும் திட்டமிட்டது. இருப்பினும் தொடர்ச்சியான போராட்டங்களால் தேர்வு முறையில் மாற்றங்கள், அமைச்சர் ராஜினாமா, சட்ட திருத்தங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை நோக்கி ஒன்றிய அரசு நகர தொடங்கியுள்ளது.

இன்று நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படும் போது, எதிர்க்கட்சிகள் நீட் தொடர்பாக விரிவான விவாதம் கோரக்கூடும். அதற்கு அரசு இணங்காவிட்டால் அவைகளின் நடவடிக்கைகள் மீண்டும் முடங்கும் சூழலும் உருவாகலாம். நீட் விவகாரம் இனி ஒரு தேர்வு தொடர்பான நிர்வாக பிரச்னையாக மட்டுமில்லாமல், கல்விக் கொள்கை, கூட்டாட்சி உரிமை, சமூக நீதி மற்றும் அரசியல் பொறுப்புணர்வு ஆகிய அனைத்தையும் தொடும் தேசிய விவகாரமாகவும் உருவெடுக்க வாய்ப்புள்ளது. ஒன்றிய அரசு தனது வழக்கமான சர்வாதிகாரத்தை மீண்டும் கையிலெடுத்தால், இன்று காலில் ஏறிய கரப்பான் பூச்சிகள், நாளை காதை தொடும் காலம் வெகு தொலைவில் இல்லை.