Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பணிந்தது ஒன்றிய அரசு...!

இந்தியாவில் வரும் 2029 மக்களவை தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கையை 543-ல் இருந்து 816-ஆக உயர்த்த ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது. இதன்மூலம், மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தின்கீழ் பெண்களுக்கு 273 இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை (மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு), மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய நடைமுறைகளோடு இணைக்காமல் தனியாக பிரித்து அமல்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு ஆலோசித்து வருகிறது.

அதன்படி, வரவிருக்கும் 2029 மக்களவை தேர்தலுக்குள் புதிய மாற்றங்களை கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ள இடங்களின் விகிதாசாரம் மாறாமல், ஒட்டுமொத்த இடங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கப்படும். ஆரம்பத்தில், 2026ம் ஆண்டுக்கு பின் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகையின் அடிப்படையில், நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்ய ஒன்றிய அரசு முயற்சி செய்து வந்தது. அப்படி செய்தால், தமிழ்நாடு 8 மக்களவை தொகுதிகளை இழக்கவேண்டிய சூழல் ஏற்படும்.

இந்த பேராபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசின் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், ஒன்றிய அரசு தனது முடிவை மாற்றியது. அதன்படி, கடந்த 2011ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகையின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை செய்து, மக்களவை தொகுதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றிய பாஜ அரசு அறிவித்துள்ளது. ஒன்றிய அரசின் தற்போதைய அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் கூடுதலாக 20 மக்களவை தொகுதிகள் உருவாக்கப்பட்டு, தமிழகத்தின் மொத்த மக்களவை தொகுதி எண்ணிக்கை 59 ஆக உயரும். புதிதாக உருவாக்கப்படும் 20 தொகுதிகளும் மகளிருக்கு ஒதுக்கப்படும் என்பதே இதன் சாராம்சம்.

இந்த நடவடிக்கை தொடர்பாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். “2026 மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகான தொகுதி மறுவரையறையை மேற்கொண்ட பின்னரே மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்னும் ஒன்றிய பாஜ அரசின் முந்தைய முடிவிலிருந்து (128-ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டம், 2023) விலகுவதாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, 4 பெரிய மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்தே இது செய்யப்படுவதாக தோன்றுகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், இத்தகைய மிக முக்கியமான நகர்வு மேற்கொள்ளப்படுவது முன்னெப்போதும் நாம் கண்டிராதது.

எனினும், திமுக தலைவராகவும், பெண்ணுரிமைக்காக நூறாண்டுகளுக்கும் மேலாக முன்னின்று போராடி வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை வாரிசாகவும் இந்த முடிவை எந்த நிபந்தனைகளுமின்றி நான் முழுமையாக ஆதரிக்கிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார். அடுத்த 30 ஆண்டுகளுக்கும் தற்போதுள்ள தொகுதி அளவு எவ்வித மாற்றமும் இன்றி தொடரும் என்னும் உறுதிமொழி அரசியலமைப்பு சட்டத்திருத்தம் வாயிலாக அளிக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடுத்த அழுத்தத்திற்கு ஒன்றிய அரசு பணிந்துள்ளது என்பதையே இது காட்டுகிறது.