Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒன்றிய அரசின் 3 சட்டங்களை திரும்ப பெறக்கோரி வழக்கறிஞர் சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: ஐகோர்ட்டில் பணிகள் பாதிப்பு

சென்னை: மத்திய அரசு இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றின் பெயர்களை சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்ததுடன் சட்டப் பிரிவுகளின் எண்களையும் மாற்றம் செய்துள்ளது. இது நாடெங்கும் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இந்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், மெட்ராஸ் பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை நடத்துவதாக கடந்த வாரம் அறிவித்தன.

இதையடுத்து, நேற்று உயர் நீதிமன்றம் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றங்களில் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடந்தது. சங்கத்தின் தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாளர் ஆர்.கிருஷ்ணகுமார், துணைத்தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ், நூலகர் வி.எம்.ரகு மற்றும் மூத்த, இளைய செயற்குழு உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த புறக்கணிப்பு போராட்டத்தால் நீதிமன்றங்களில் பெரும்பாலான வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் வழக்குகளின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.