Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

ஒன்றிய பட்ஜெட்டில் பெயரளவுக்கு கூட வளர்ச்சி திட்டம் இல்லை தமிழக மக்கள் மீது பாஜவுக்கு கடும் வெறுப்பு: திண்டிவனம் அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

திண்டிவனம்: தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் பாஜவுக்கு கடும் வெறுப்பு இருப்பதால், ஒன்றிய பட்ஜெட்டில் பெயரளவுக்கு கூட வளர்ச்சி திட்டம் இல்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் சிப்காட்டில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், ரூ.390 கோடியே 44 லட்சம் செலவிலான 199 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.254 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டிலான 24 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 13,879 பயனாளிகளுக்கு ரூ.43 கோடியே 75 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், ‘‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் 10,000 முகாம்கள் நிறைவையொட்டி, இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 1 லட்சத்து 82 ஆயிரத்து 967 பயனாளிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட உதவித் தொகைகளையும் வழங்கினார். இளைஞர்களின் கனவுகளை பதிவு செய்யும் “என் கனவு, என் எதிர்காலம்” என்ற திட்டத்தின் புதிய இணையதளத்தை தொடங்கி வைத்தார். பின்னர், விழுப்புரம் மாவட்டத்தில் மொத்தம் 13879 பேருக்கு ரூ.43 கோடியே 74 லட்சத்து 92 ஆயிரத்து 950 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர், ரூ.60 கோடியில் கட்டப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையும், திண்டிவனம் மக்களின் 40 ஆண்டுகால கோரிக்கையான இந்திராகாந்தி புதிய பேருந்து நிலையத்தையும், மேடையிலிருந்தபடியே காணொலி காட்சி மூலம் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் 2 பயனாளிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடினார்.

பின்னர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தொலைநோக்கு பார்வையோடு தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளில் வழங்கிய பெரும்பாலானவற்றை நிறைவேற்றியும், வாக்குறுதியில் சொல்லப்படாத சில திட்டங்களை முத்திரை திட்டங்களாக செய்து கொடுத்தும், தமிழ்நாட்டு மக்களுடைய கனவுகளை நிறைவேற்றி வருகிறோம். திராவிட முன்னேற்ற கழகத்தை பொறுத்தவரைக்கும் சட்டங்களையும், பெரிய திட்டங்களையும் நிறைவேற்றுவது மட்டுமல்ல. தமிழ்நாட்டின் மக்களின் ஒவ்வொருவரின் தேவைகளையும் நிறைவேற்றுகிறோம்.

அதற்காக தான் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு முன் தமிழ்நாட்டில் இருக்ககூடிய 234 தொகுதிகளுக்கும் உங்களுடைய குறைகளை கேட்டு கோரிக்கைகளை மனுக்களாக வாங்கியிருக்கிறேன். இந்த பயணத்தில் கோரிக்கை மனுக்களை மட்டும் வாங்கவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கையும் பெற்று திராவிடமாடல் அரசு அமைத்தோம். அந்த மனுக்களை எல்லாம் 100 நாட்களுக்குள் தீர்த்து வைக்கவேண்டும் என முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற ஒரு புது துறையை உருவாக்கினேன்.

இந்த துறை மூலமாக மக்களிடம் இருந்து வாங்கிய 4,57,645 மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு கண்டோம். அந்த 100வது நாளிலே அதாவது ஆகஸ்ட் 2021 14ம் நாள் தலைமை செயலகத்தில் சிறப்பு விழா நடத்தி 32,283 பேருக்கு பட்டாவும், 30,455 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியமும் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்ல 19,664 வளர்ச்சி திட்ட பணிகளுக்காக ஒப்புதல் ஆணையும், 9,444 வீடுகள் கட்டுவதற்கு நிதி உதவியும், 554 கோடியே 27 லட்ச ரூபாய் செலவிலான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான ஆணையும் வழங்கினேன்.

மக்களுடைய குறைகளை தேவைகளை, உன்னிப்பாக கவனித்து விரைவாக நாம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றியுள்ளது. இது மக்களிடம் நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் அதிகமாக்கியது. தொடர்ச்சியாக முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் ஆகிய 3 துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி, உங்களுடன் ஸ்டாலின், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், பல்வேறு சமூக பாதுகாப்பு திட்டங்கள், ஓய்வூதியம், வாட்ஸ் அப்பில் அரசு சேவை, உங்கள் கனவு சொல்லுங்க திட்டத்தை தொடங்கி வைத்தேன்.

இப்படி நாம் ஒருபக்கம் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக திட்டமிட்டு வந்தோம் என்றால், ஒன்றிய அரசும், அதனுடைய கூட்டாளிகளும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை கெடுக்க அனைத்து செயல்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

அதற்கு சமீபத்திய உதாரணம் தான் சமீபத்தில் ஒன்றிய அரசு வெளியிட்ட பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எதுவும் இல்லை. ஒப்புக்காவது இதுவரை ஏதாவது சொல்லி வந்தார்கள். அதுவும் இந்த ஆண்டு இல்லை. பேருக்குகூட தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சி திட்டமும் இல்லை. நம் பல ஆண்டு கோரிக்கைகள் எதுவும் இல்லை.

பொதுவாக தேர்தல் நடக்கின்ற மாநிலங்களுக்கு அந்த ஆண்டு பட்ஜெட்டில் பணம் ஒதுக்குவது அவர்களது தந்திரமாக இருக்கும். பீகார், ஒடிசா, ஆந்திரா அந்த மாநிலங்களுக்கு எல்லாம் அப்படிதான் நிதி ஒதுக்கினாங்க. இப்போது தமிழ்நாட்டுக்கு தேர்தல் வரப்போகிறது. ஒன்றிய அரசு மற்ற மாநிலங்களுக்கு பண்ணுவது கூட நம் மாநிலத்திற்கு பண்ணவில்லை. அந்த அளவுக்கு தமிழ் மீதும், தமிழர் மீதும், தமிழ்நாட்டின் மீதும் அவர்களுக்கு வெறுப்பு. இந்தியாவிலேயே 2வது இடத்தில் தமிழ்நாடு தான் இருக்கிறது. அதிக தொழிற்சாலை கொண்ட நாடு நம்நாடு.

இப்படிப்பட்ட மாநிலத்தில் புதிய நெடுஞ்சாலைகள், புதிய வழித்தடங்கள், மெட்ரோ ரயில்கள், உட்கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுது. ஆனால் ஒன்றிய அரசுக்கு வரி வருவாயை வாரி வழங்குகின்ற நம் தமிழ்நாட்டிற்கு மிக மிக சொற்பமான பங்கை தான் திருப்பி தராங்க. 11 ஆண்டுகளாக சிறப்பு திட்டம் வழங்காமல் வஞ்சிக்கிறாங்க. ஒருவேளை தேர்தல் ரிசல்ட் தெரிந்து நாம் தோக்கதானே போகிறோம். இப்படி நடந்து கொள்கிறார்களோ என்னவோ. உண்மைதான் நாம்தான் வெற்றி போகிறோம். அடுத்து அமையபோகிறது உங்கள் திராவிடல் மாடல் 2.0 அரசு தான். இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றுவோம். உங்கள் கனவுகளை நிச்சயம் இந்த முத்துவல் கருணாநிதி ஸ்டாலின் நிறைவேற்றியே தருவான். இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

* முதலமைச்சர் ரோடு ஷோ பொதுமக்கள் ஆரவாரம்

திண்டிவனம் சிப்காட் வளாகத்தில் நேற்று நடந்த அரசு விழாவில் பங்கேற்க சென்னையிலிருந்து வேனில் திண்டிவனம் வந்தார். அப்போது செஞ்சி பேருந்து நிறுத்தத்தில் சாலையின் இருபுறமும் நின்றிருந்த பொதுமக்கள் கைகளை உயர்த்தி முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். உடனே முதலமைச்சர் தனது வேனில் இருந்து கீழே இறங்கி சாலையில் நடந்து சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது அங்கிருந்த சிலர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பொதுமக்களின் வரவேற்பை பெற்ற மு.க.ஸ்டாலின், ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று விழா மேடையை வந்தடைந்தார்.

* திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ

திண்டிவனம் தொகுதியில் கடந்த 2011 முதல் 2016 வரை அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஹரிதாஸ். அவர் சமீபகாலமாக அதிமுக நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் அதிருப்தியில் இருந்தார். நேற்று அரசு விழாவில் பங்கேற்க திண்டிவனம் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை, வழியிலேயே தனியார் ஓட்டலில் நேரில் சந்தித்த ஹரிதாஸ், அவருக்கு சால்வை அணிவித்து திமுகவில் இணைந்தார். சிவி சண்முகம் செயல்பாட்டில் சில அதிமுக மூத்த நிர்வாகிகள் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது முதல் விக்கெட் காலியாகி இருப்பதாக அக்கட்சியினரே சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.