அமெரிக்கா-ஈரான் இடையிலான போர் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஏற்பட்ட நெருக்கடிகள் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தின. இது உலகெங்கிலும் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டை உருவாக்கியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. தற்போது போர் முடிவுக்கு வந்ததால், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 70 டாலர் வரை குறைந்துள்ளது.
ஆனால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் உடனடி குறைப்பு எதுவும் செய்யப்படவில்லை. சர்வதேச சந்தை நிலவரப்படி இந்தியாவில் எரிபொருள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் மாற்றியமைக்கவில்லை. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 120 டாலர் என்ற உச்சத்தில் இருந்து தற்போது சரிந்துள்ளது. இதனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது. ஆனால் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்களால் இதுவரை விலை குறைக்கப்படவில்லை.
போருக்கு முன்பு உலகளவில் கச்சா எண்ணெய் விலை நீண்ட காலமாக குறைவான விலையிலேயே நீடித்து வந்தது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஏற்பட்ட பயனை மக்கள் அனுபவிக்க முடியாமல் தொடர்ச்சியாக கலால் வரியை பாஜ அரசு உயர்த்தியது. கடந்த 4 ஆண்டுகளில் 300 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களிடமிருந்து வரியாக பிடுங்கி அரசு கஜானாவில் மோடி அரசு சேர்த்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் மோடி அரசு இதைப்பற்றி கவலைப்படாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை சலுகையாக வாரி வழங்கி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் சந்தேகிக்கின்றன. கடந்த காலாண்டில் (3 மாதத்தில்) பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எரிபொருட்களை அடக்க விலைக்கு கீழ் விற்பனை செய்ததால் ரூ.74,781 கோடி இழப்பை சந்தித்துள்ளன.
பழைய விலையில் வாங்கிய அதிக விலை கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து விற்று, முந்தைய இழப்பை ஈடுகட்டிய பிறகே சில்லரை விற்பனை விலை குறைக்கப்படும் என பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறுவது ஏற்கத்தக்கது அல்ல. பாஜ அரசு பதவியேற்றபோது கடந்த 2014ம் ஆண்டில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 115 டாலராகவும், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு 60 ஆகவும் இருந்தது. அப்போது பெட்ரோல் விலை ரூ.74.60 ஆகவும், டீசல் விலை ரூ.60.05 ஆகவும் இருந்தது.
ஒன்றியத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் கலால் வரி ரூ.5 மட்டுமே இருந்தது. தற்போது இது ரூ.20.48 ஆக உயர்ந்திருக்கிறது. அதேபோல, ஒரு லிட்டர் டீசல் விலையில் ரூ.15.83 ஆக கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு மூலம் மக்களுக்கு போய் சேர வேண்டிய பலன்களை பாஜ அரசு அபகரிக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இதுவரை காட்டிய சலுகைகள் போதும். மக்களுக்கும் கொஞ்சமாவது சலுகைகள் காட்ட வேண்டும். உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும். ஏழை, எளிய மக்களின் சுமையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
