Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் பிஎம்ஸ்ரீ திட்டம் செயல்படுத்த கடிதம் அனுப்ப ஒன்றிய பாஜ அரசு முடிவு: புதிய அரசின் முடிவு என்ன?

சென்னை: தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடந்து முடிந்து இன்னும் புதிய கட்சி பொறுப்பேற்கவில்லை. தேர்தல் சூடு இன்னும் அடங்கவில்லை. இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகளுக்கு பிரதமர் ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கடிதம் அனுப்ப ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னதாக ஆட்சியில் இருந்து திமுக, ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு எதிரான குரல் கொடுத்து வந்தது. குறிப்பாக, ஒன்றிய அரசிடம் இருந்து முறையாக வர வேண்டிய வரி பங்கீடு, கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய நிதி, வாக்காளர் பட்டியல் திருத்தம், தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளை கண்டித்தும், எதிர் குரல் கொடுத்தும் வந்தது.

இந்நிலையில், தமிழக சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது தவெக ஆட்சி அமைய உள்ளது.இந்த பரபரப்புக்கு இடையே மாநில அரசு பள்ளிகளில் ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ(பிரதம மந்திரி பள்ளிகள்) திட்டத்தை செயல்படுத்துவதற்காக, மேற்கு வங்கம், மற்றும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களுக்கு ஒன்றிய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. மேற்கு வங்கம், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் அரசியல் களத்தை மாற்றியமைத்துள்ள சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து இந்த நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுத்துள்ளது. மேலும், தேசிய கல்விக் கொள்கை 2020 உடன் இணைக்கப்பட்ட முக்கிய கல்வி முன்னெடுப்புகளை செயல்படுத்துவது குறித்தும் ஒன்றிய அரசு தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி செய்தியாளர்களிடம் கூறியுள்ளதாவது: பிரதமர் ஸ்ரீ திட்டத்தை விரைவாக ஏற்றுக்கொள்ள கோரி, இன்றோ நாளையோ கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள், தேசிய கல்விக் கொள்கை 2020க்கு இணங்கும் வகையில் மாதிரி நிறுவங்களாக உருவாக்கப்பட உள்ளன. மாநிலங்கள் இப்போது பிரதமர் ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம். பிரதமர்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்காக மாநில தலைமை செயலாளர்களுக்கு கடிதம் எதுவோம். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். முன்னதாக, தமிழ்நாட்டில் இருந்த திமுக அரசு, மேற்கு வங்கத்தில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் அரசுகள், ஒன்றிய அரசின் நிதியுதவி ெபறும் இந்ததிட்டத்தில் சேராமலும், ஒன்றிய அரசுடன் தேவையான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலும் இருந்தன.

சமீபத்திய தேர்தல் நிகழ்வுகளைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் பிரதமர்ஸ்ரீ திட்டத்தின் செயலாக்கம் சுமூகமாகலாம் என்றும், அதேசமயம், தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நிலைமை தமிழ்நாட்டின் நிலைமை நிச்சமற்றதாகவே அதிகாரிகள் தெரிவித்தனர். பிரதமர்ஸ்ரீ திட்டமானது, தேசிய கல்விக் கொள்கை 2020ன் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்த, மாதிரி நிறுவனங்களாக நாடு முழுவதும் 14 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளை மேம்படுத்துவது நோக்கமாக கொண்டுள்ளது.

இந்த விவகாரம் முன்பு கல்வி நிதி ஒதுக்கீடு தொடர்பாக ஒன்றிய அரசுக்கும் பல எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கும் இடையே உரசல் ஏற்படவும் வழிவகுத்தது. பிரதமர்ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு கையெழுத்திடாததால், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், டெல்லி மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கடந்த 2024-25ம் நிதியாண்டில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் நிதி வழங்குவதை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருந்தது. பிரதமர்ஸ்ரீ திட்டத்தின் கீழ் நிதி பெறுவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது அவசியம் என்று ஒன்றிய அரசு கூறிவரும் நிலையில், தேசிய கல்விக் கொள்கை மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களை ஏற்றுக்கொள்வதோடு கல்வி மானியங்களும் இணைக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் ஏற்கெனவே குற்றம்சாட்டியிருந்தன.

பள்ளிகள் அளவில் மனநல கொள்கையை அறிமுகம் செய்து, அதை விரைவில் பொதுவெளியில் வெளியிடவும் ஒன்றிய கல்வி அமைச்சகம் தயாராகி வருதாக அந்த அதிகாரி தெரிவித்தார். மேலும், நாங்கள் அதை ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது. ஒரு குழந்தையின் மனநலம் பள்ளியால் மட்டுமல்ல, வீட்டுச் சூழலாலும் பாதிக்கப்படுகிறது. எனவே அனைவரும் ஒன்றிணைந்து குழந்தையின் கல்வி மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்தை தவறாமல் மதிப்பாய்வு செய்வது அவசியம்.

இந்த கொள்கையானது, பள்ளிகளில் மன நல ஆதரவு அமைப்புகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மன அழுத்தங்களை முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை அடங்கும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க தலைமைச் செயலாளர்களுக்கு பிரதமர்ஸ்ரீ ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியதின் அவசியம் குறித்து கடிதம் எழுதப் போவதாக ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனால் புதிதாக பதவி ஏற்கும் தமிழக அரசுக்கு அக்கினி பரீட்சை தொடங்கியுள்ளது.