Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலராத கட்சியின் ரகசிய வலையில் சிக்கிய சுயேச்சை பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘கதர் கட்சியில் மாவட்ட தலைவர்கள் நியமனம் தொடர்பாக குழப்பம் நீடித்து வருகிறதாமே...’’ என்று பேச்சை தொடங்கினார் பீட்டர் மாமா. ‘‘தமிழகத்தின் கடைகோடி மாவட்டத்தில் கதர் கட்சியில் புதிதாக 3 மாவட்ட தலைவர்களை நியமிப்பதில் சிக்கல் இருந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென மாநில தலைமையிடம் இருந்து தற்போதைய தலைவர்களுக்கு வந்த நியமன கடிதமும், வாழ்த்தும் அவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளதாம். ஆனால் இதனை நம்பாதீங்க, தலைவர் பதவிகளை வழக்கம் போல் அகில இந்திய தலைமை தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கும்.

அதற்குள் அவசரப்பட வேண்டாம். வாழ்த்து கடிதம் மாநில தலைமையிடம் இருந்து தவறுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்று மற்றொரு தரப்பு சமூக வலைதளங்களில் விளக்க கடிதம் வாசிக்கிறார்களாம். நிலைமை இவ்வாறு இருக்க, இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை மாநில தலைமை முதல், அகில இந்திய தலைமை வரை யாரும் விளக்கமாக வெளிப்படையாக அறிவிக்க வில்லையாம். இதனால் கடிதம் பெற்றவர்கள், பதவி நீடிப்பு செய்யப்பட்ட மகிழ்ச்சியில் உள்ளார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘ஆவினில் பெண் அதிகாரி ஒருவர் கல்லா கட்டுவதாக பரபரப்பாக பேசப்படுகிறதே...’’ என்று அடுத்த மேட்டருக்கு தாவினார் பீட்டர் மாமா. ‘‘மான்செஸ்டர் மாவட்ட ஆவினில் பால்பேடா, நெய் டெண்டர் எடுப்பதில் பெரிய முறைகேடு நடக்குதாம். இங்கு நடக்கும் டெண்டர்களை பல வருஷமா ஒருத்தரே எடுத்து வர்றாராம். அதுவும், ஆவினில் பணியாற்றி வரும் 5 எழுத்து பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரி, தனது பினாமி பெயரில் டெண்டர் எடுத்து கல்லா கட்டி வர்றாராம்..

இதுல, பால்பேடா டெண்டர் முடிய இன்னும் 2 மாசம் இருக்கும் நிலையில், இப்போது புதிய டெண்டர் விட முடிவு செய்திருக்காங்க. சென்னையில் பால்பேடா கிலோ ரூ.17க்கு டெண்டர் விட்டு வர்ற நிலையில், இங்க பால்பேடா கிலோ ரூ.35க்கு டெண்டர் விட இருக்காங்களாம். 2 வருஷம் கொடுத்து வந்த டெண்டரை மாத்தி 3 வருஷம் கொடுத்தா இன்னும் கூடுதலாக கல்லா கட்ட முடியும்னு யாரோ சொல்லியத கேட்டு, அதையும் வரப்போகும் டெண்டரில் சேர்க்க இருக்காங்களாம்..

தேர்தலுக்கு முன்னே டெண்டர் போட்டால், பையை நிரப்பிக்கொள்ளலாம்னு இந்த பெண் அதிகாரி தீவிரமா வேலை செஞ்சுட்டு வர்றாராம். மான்செஸ்டர் மாவட்ட ஆவின் வட்டாரத்தில் இப்ப இது தான் ஹாட் டாபிக்கா ஓடிட்டு இருக்காம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கிரிவலம் மாவட்ட சப்-டிவிஷன்ல லிஸ்ட் போட்டு, குழுவ நியமிச்சு காக்கிகள் சம்திங் வேட்டை நடத்துறாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டம் ஆறு அணி பட்டு நகர் சப்-டிவிஷன்ல ஒரு பெண் அதிகாரி இருந்தவரைக்கும், சட்ட விரோத செயல்கள் கட்டுக்குள் இருந்துச்சாம்.

இப்ப, அந்த பெண் அதிகாரி டிரான்ஸ்பர் ஆகி சென்றுவிட்டாராம். இதனால, சில மாசத்துக்கு முன்னாடி, இந்த சப்-டிவிஷன்லயே பணியாற்றின ஸ்டார் காக்கி தான், சப்-டிவிஷன் அதிகாரியாக வந்திருக்குறாராம். இவருக்கு சப்-டிவிஷன் எல்லாம் அத்துப்படியாம். இங்க வர்றதுக்கே, 40 எல் வரைக்கும் நான் கொடுத்துட்டு தான் வந்தேன். அதனால நான் சொல்வதை தான் செய்யணும். வரவேண்டியது சரியா வந்துடணும்னு ஸ்ட்ரிட்டா சொல்லிட்டாராம்.

அதோடு டிரைவர் முதல்கொண்டு, தனக்கு விசுவாசமான சில காக்கிகளை குழுவாக நியமிச்சிட்டாராம். அப்புறம் ஒட்டுமொத்த மாபியாக்கள் லிஸ்ட் எடுத்து வெச்சிக்கிட்டு, சம்திங் யாருகிட்ட கொடுக்கணும்னு சொல்லி அனுப்பிட்டாராம். இப்ப சப்-டிவிஷன் காக்கிகள் காட்டில் பணமழை பொழியுதாம். இந்த குழுவுல இருக்குற காக்கிகளுக்கும் நல்ல கவனிப்பாம். இதுல யாரு அதிக சம்திங் வாங்கி கொடுக்குறதுன்னு அந்த குழுவுல போட்டி வேற நடக்குதாம்.

அதோட அந்த குழுவுல இருக்குறவங்களுக்கு வேற எந்த வேலையும்கொடுக்க கூடாதுன்னு வாய்மொழி உத்தரவாம். இதைப்பார்த்து நேர்மையான காக்கிகள் புலம்பி வர்றாங்கலாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மாங்கனி ஜெயில் ஆபீசர் பிடில் வாசிப்பதாக பேச்சு அடிபடுதே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிறைத்துறையில் வார்டன்கள் முதல் ஆபீசர்ஸ் வரை மிகவும் சோர்ந்த முகத்துடனேயே இருக்காங்களாம்.. இங்கு பணியாற்றிய உச்ச அதிகாரி ஒருவர், கடந்த 2 ஆண்டுகளாக கண்கொத்தி பாம்பாக இருந்து சிறைத்துறையை சீர்படுத்தினாராம்..

சிறைக்கும் காவல்துறைக்கும் வேறுபாடு இருக்கும் நிலையில், ஒவ்வொரு மத்திய சிறையிலும் விஜிலென்ஸ் என்ற பெயரில் 2 போலீசாரை உள்ளே கொண்டு வந்துட்டாங்களாம்.. இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதையே வேதவாக்காக கருதிய அந்த அதிகாரி, உடனடியாக நடவடிக்கை எடுத்தாராம்.. ஆனால் அந்த விஜிலென்ஸ் ஆபீசர்ஸ் ஜெயிலுக்குள்ளாற கைதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி பல்வேறு விதங்களில் துட்டு சாம்பாதிப்பதாக சொல்றாங்க.

அதையும் தாண்டி சுமார் 500 வார்டன்கள் மனசொடிஞ்சி போய் இருக்காங்களாம்..

புதிதாக வந்த உச்ச அதிகாரி, வார்டன்களின் குறைகளை உடனடியாக விசாரித்து தீர்ப்பேன் என்றாராம். இதனால ஹேப்பியான வார்டன்கள் ஒவ்வொரு மண்டலத்தில் இருந்தும் வாரம் 20 பேர் போய் சந்தித்து இடமாறுதல் கேட்டு குறைகளை சொன்னாங்களாம். ஆனால் அச்சிறையின் மாஜி அதிகாரி ஜெயிலுக்குள்ளாற குடிசை போட்டு இருப்பதால் குறைகளை சொல்ல முடியாமல் வார்டன்கள் தவிக்கிறாங்களாம்.. ஆனால் புதிய அதிகாரியும் குறைகளை கேட்பதில் சுணக்கத்தை ஏற்படுத்திக்கிட்டாராம்..

உடல்நலம் பாதிப்பு இருந்தால் மட்டும் தான் தன்னை பார்க்க வரணும் என்றதோடு, சிகிச்சை செய்யும் மருத்துவமனையை தொடர்பு கொண்டு ஆட்களை வச்சி விசாரிக்கிறாராம்.. இதனால சிறை வார்டன்கள் ரொம்பவே அதிர்ச்சியில இருக்காங்களாம்.. இப்படியாக ஒட்டுமொத்த வார்டன்களும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஆதரவா மாங்கனி ஜெயில் ஆபீசர் மட்டும் பாட்டு பாடி ஆறுதல் சொல்லிக்கிட்டிருக்காராம்..

பாட்டு பாடுவதில் ஆர்வம் கொண்ட அவர், ஆபீசுக்குள்ளாற இருந்து வணக்கம் மக்களே என்ற தலைப்பில் ரீல்ஸ் விட்டுக்கிட்டிருக்காராம்.. ரோம் நகரம் பற்றி எரிந்தபோது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன் என்ற கதையா இருக்குதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுவையில் மலராத கட்சியின் ரகசிய வலையில் சுயேச்சை சிக்கியதாக பேச்சு அடிபடுகிறதே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘அரசியல் கூத்து அசால்ட்டாக அரங்கேறும் தெற்கு யூனியனில் பதிவுபெற்ற கட்சிகளே புற்றீசல்போல் இருக்கிறதாம்.

பொதுத்தேர்தல் நெருங்குவதால் அமைப்புகளை நடத்தியவர்கள் எல்லாம் புதுசா புதுசா கட்சி ஆரம்பிக்கிறார்களாம். இதனால் யூனியன் அரசியலே உள்ளூர்வாசிகளின் நகைப்புக்குள்ளாகி உள்ளதாம். நிலைமை இப்படியிருக்க ஏற்கனவே புதுக்கட்சி தொடங்கிய சுயேச்சை, தனது கட்சிக்கான புதிய அலுவலகத்தை நேற்று திறந்தாராம். இதில் ஏற்கனவே கட்சி தொடங்கி பெயில் ஆன மாஜி எம்பி முதல்நபராக பங்கேற்க, தாமரையில் இருந்து தவெகவுக்கு தாவிய நாதனும் நேரில் வாழ்த்துமழை பொழிந்தாராம்.

மதச்சார்பற்ற நிலைப்பாட்டில் அரசியலை முன்னெடுக்கும் சுயேச்சையை, நாசுக்காக நாதன் சந்தித்தது கூட்டணி சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம். தாமரைக்கு எதிராக தொடர் குரல் எழுப்பும் சுயேட்சையை தந்திரமாக மாஜி தாமரை தலைவர் மூலமாக புதிய வலையில் சிக்கவைக்க மலராத கட்சியின் பி-டீம் வகுத்துள்ள ரகசிய வியூகமா இது என்ற முணுமுணுப்பு சுயேட்சை ஆதரவாளர்களிடம் எழுந்துள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா.