Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலராத கட்சியின் சர்ச்சைக்குரிய நிர்வாகி கோட்டைக்குள் நுழைய துடிப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘கோவை மாவட்டத்தில் தொகுதி பங்கீடு தொடர்பாக இலை கட்சிக்கும், தாமரை கட்சிக்கும் மல்லுக்கட்டு நடக்கிறதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 5 சட்டமன்ற தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தாமரை கட்சி நிர்வாகிகள், இலைக்கட்சி நிர்வாகிகளுடன் மல்லுக்கட்டி வருகின்றனர். தொகுதி பங்கீடு குறித்து, இன்னும் பேச்சுவார்த்தை துவங்கவில்லை, அப்புறம் பார்க்கலாம், என இலைக்கட்சி நிர்வாகிகள் பதிலளித்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை முடிவில், 2 தொகுதிக்கு மேல் விட்டுக்கொடுக்க கூடாது என்கிற நிலைப்பாட்டில் இலைக்கட்சியினர் தீவிரமாக உள்ளனர். அதில், ஒன்று கோவை வடக்கு. மற்றொன்று கிணத்துக்கடவு தொகுதி. இதில், கோவை வடக்கு தொகுதியில் தாமரைக்கட்சி பெண் நிர்வாகியும், சிட்டிங் சம உ...ம் ஆன மூன்றெழுத்து பெயர் கொண்ட நபர் போட்டியிட உள்ளாராம். கிணத்துக்கடவு தொகுதியில் யார் வேட்பாளர் என இன்னும் அக்கட்சி தலைமை முடிவு செய்யவில்லை.

ஆனால், அதற்குள் ராஜன் பெயர் கொண்ட ஒரு நிர்வாகி, களத்தில் இறங்கி, கிரவுண்ட் ஒர்க் பார்க்க துவங்கி விட்டாராம். யார் யாருக்கு என்னென்ன பரிசுப்பொருள் கொடுக்க வேண்டும், எந்தெந்த அமைப்புக்கு எவ்வளவு நிதி கொடுக்க வேண்டும், பூத் கமிட்டிக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என தனித்தனி பட்டியல் தயாரித்து, அதன்படி கரன்சி விநியோகத்தை துவக்கிவிட்டாராம். “இன்னும் தொகுதி ஒதுக்கீடே செய்யவில்லை. வேட்பாளர் யாருன்னும் அறிவிக்கவில்லை.

அதுக்குள்ள ஏன்பா இந்த ஆளு, இவ்ளோ பந்தா காட்டுகிறார், என தாமரை கட்சியினரே புலம்பும் நிலை உள்ளதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இளம் தலைவர் வருகையால் புதுவையில் கை கோஷ்டி உற்சாகத்தில் இருக்கிறதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நாடு முழுவதும் ஆதிக்கம் செலுத்திய கை கட்சிக்கு தொடர்ந்து சறுக்கல் ஏற்பட தென்மாநிலங்கள் மட்டுமே கைகொடுப்பதால், டெல்லி தலைமை அங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறதாம்.

சட்டசபை தேர்தலை சந்திக்கும் அம்மாநில பிரதிநிதிகளை சமீபத்தில் அழைத்து ஆலோசனை நடத்தியதாம். அங்கிருந்து கொடுத்த வழிகாட்டுதலின்படி புதுச்சேரி யூனியனில் எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்துவிட வேண்டுமென கைதேர்ந்த வேலைகளில் நிர்வாகிகள் இறங்கி உள்ளார்களாம். இதன் ஒருபகுதியாக நகர பகுதி முழுவதும் ஆளும்தரப்புக்கு எதிரான கமிஷன் போஸ்டரை பளிச்சென ஒட்டியதாம்.

அடுத்ததாக பாத யாத்திரை தொடங்கி இருக்கிறார்களாம். இம்மாதம் இறுதிவரை தொடரும் யாத்திரையில் இளம் தலைவரும் பங்கேற்பதாக பச்சைக்கொடி காட்டப்பட்டு உள்ளதாம். இதனால் கை கோஷ்டி புதுஉற்சாகத்தில் உள்ளார்களாம். இருப்பினும் கோஷ்டியை விடுங்க... ஒன்றிணைங்க... என்பதுதான் தலைவரின் முதல் அறிவுரையாக இருக்க வேண்டுமென அடிமட்ட தொண்டர்கள் விரும்புகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலை கட்சியில் பிரிந்தவர்களை சேர்ப்பதில் 4 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கப்போர் நடக்குதாமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சேலம்காரர் பதவிக்கு வந்த பிறகு நடந்த ஒரு தேர்தல்களில் கூட இலை கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இதை தேனிக்காரர் இன்றளவும் சுட்டிக் காட்டுகிறார். தமிழ்நாட்டில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இலை கட்சியில் எப்படியும் இணைந்து விடலாம் என்ற தேனிக்காரர், குக்கர்காரரின் ஆசை நிராசையாக இருந்து வருகிறது.

இதற்காக டெல்லி கேப்பிட்டல் எவ்வளவோ முயற்சி செய்தும் சேலம்காரரை அசைக்க முடியவில்லை. இதுகுறித்து கலகக்குரல் எழுப்பிய கோபிக்காரரையும் கோபித்துக் கொண்டு சேலம்காரர் வெளியே தூக்கி போட்டார். இதற்கு காரணம் பிரிந்தவர்களை சேர்த்தால் கட்சி அவர்கள் கைக்கு சென்று விடும் என்ற பயம் தான் சேலம்காரரை ஆட்டிப் படைக்கிறது. இந்நிலையில் தெர்மாகோல் புகழ் மாஜி இலை கட்சியில் இருந்து பிரிந்தவர்களை சேர்க்கும் தேசிய கட்சியின் முயற்சியில் தப்பு இல்லை என குரல் கொடுத்திருக்கிறார்.

அவரது குரலுக்கு சேலம்காரரின் ரியாக்‌ஷன் என்ன என எதிர்பார்த்து அல்வா, முத்து மாவட்ட தேனி தரப்பு ஆதரவாளர்கள் காத்திருக்கிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிவகங்கை மாவட்டத்துல மலராத கட்சி நிர்வாகி 2 சீட்டு கேட்டு அடம்பிடிப்பதால் இலை கட்சி புலம்பி வருதாமே...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

வரவுள்ள தேர்தலில் தங்கள் தரப்பிற்கு 50:50 என்ற கணக்கில் 2 தொகுதிகள் வேண்டும் என இலை தரப்பிடம் மலராத கட்சி தரப்பு கேட்டுள்ளது. சர்ச்சைக்கு பெயர் போன, நீதித்துறையை அவ்வப்போது அவமதிப்பவரும், அரசர் பெயர் கொண்டவருமான ஒருவர் மட்டும் தானே இந்த மாவட்டத்தில் இருக்கிறார். எதற்காக 2 சீட் கேட்கிறீர்கள் என இலைத்தரப்பினர் கேட்டனராம்.

அதற்கு, இந்த தேர்தலையும் தாண்டினால் அவருக்கு ரொம்ப வயசாகிடும். இதை தவறவிட்டால் பிறகு எப்போது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்காது. அதனால இலை தரப்பு புண்ணியத்தில் எப்படியாவது கோட்டைக்குள் சென்றுவிட வேண்டுமென்ற கடைசி கட்ட ஆசையில் உள்ளாராம். எனவே, அவருக்காக ஒரு தொகுதியும், கடந்த எம்பி தேர்தலில் போட்டியிட்டு சீட்டு நிறுவன முதலீட்டு பணத்தை, வாரி இறைத்து செலவு செய்த தேவமான பெயரை கொண்டவருக்காக ஒரு சீட்டும் வேண்டும் என கேட்கிறார்களாம்.

கூட்டணியில் இவருக்கு சீட் வாங்கி கொடுத்தால் மாவட்டத்திலுள்ள கட்சி நிர்வாகிகள் அனைவரும் அடுத்த 5 ஆண்டிற்கு தேவையான வசதியை தேவமானவர் மூலம் பெருக்கிக் கொள்ளலாம் என்ற கணக்கில் மலராத கட்சியினர் கூட்டம், கழித்தல் கணக்கு போட்டு வருகிறார்களாம். இது இலைத்தரப்பை ரொம்பவே அப்செட்டாக்கியுள்ளது...’’ என்றார் விக்கியானந்தா.