Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
DMK MK Stalin
search-icon-img
Advertisement

மே 3ம் தேதி இளநிலை ‘நீட்’ தேர்வு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படும் 2026ம் ஆண்டிற்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த காலங்களில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான இளநிலை நீட் தேர்வு அறிவிப்பை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. வரும் மே மாதம் 3ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கி, மார்ச் மாதம் 8ம் தேதி இரவு 9 மணி வரை நடைபெறும். விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மார்ச் மாதம் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு மே மாதம் 1ம் தேதி வெளியாகும். தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் பாதியில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவினருக்கு 1,700 ரூபாயும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1,600 ரூபாயும், எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 1,000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கடந்த முறை இருந்த விருப்பக் கேள்விகள் முறை நீக்கப்பட்டு, தற்போது இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் என மொத்தம் 180 கட்டாயக் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சரியான விடைக்கும் 4 மதிப்பெண்களும், தவறான விடைக்கு 1 மதிப்பெண் குறைப்பு முறையும் பின்பற்றப்படும். வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் 17 வயது பூர்த்தியடைந்த பிளஸ் 2 வகுப்பு முடித்த அல்லது படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பொதுப் பிரிவினர் 50 சதவீத மதிப்பெண்களும், இடஒதுக்கீடு பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது அவசியமாகும்.