Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மலராத கட்சிக்கு ஷாக் கொடுக்க இலை தலைவர் போட்ட திட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோதுமை பாக்கெட்டில் நிர்வாகி படம் மிஸ்ஸிங் ஆனதற்கு புல்லட்சாமியின் உள்ளடிதான் காரணம்னு பேச்சாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.

‘‘மதுவுக்கு பெயர்போன யூனியனில் மாவட்ட நிர்வாகிக்கும், புல்லட்சாமிக்கும் இடையிலான உரசல் முழுமையாக முடிந்தபாடில்லையாம்.. சமீபத்தில் நிர்வாகி பங்கேற்ற அரசு விழாவை ஒட்டுமொத்தமாக புல்லட்சாமி தரப்பு புறக்கணித்து தனிமைப்படுத்த போலி மருந்து விவகாரம் வேகமெடுத்ததாம்.. அடுத்தடுத்து பூதாகரமாக தகவல்கள் வெளியாக அத்துறையை கவனிக்கும் புல்லட்சாமி மீது விமர்சனங்கள் எழுந்ததாம்.. மலராத கட்சியை தாங்கி பிடித்தும், தனக்கு எதிராக நிர்வாகி நடத்தும் திரைமறைவு வேலைகளை டெல்லி பொறுப்பாளரின் கவனத்துக்கு கொண்டு சென்றாராம் புல்லட்சாமி.. அவர்களோ தங்களுக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமில்லை என கைகழுவ மலராத கட்சி அதிருப்தி கோஷ்டியுடன் நட்புறவு பாராட்டினாராம் பவர்புல் நிர்வாகி.. இதனால் தொடர்ந்து புல்லட்சாமி புலம்பிய நிலையில் ரேஷன் கோதுமை பாக்கெட்டில் நிர்வாகியின் படமோ மிஸ்சிங் ஆனதாம்.. ஏற்கனவே ரேஷன் அரிசி பாக்கெட்டில் படம் இடம்பெற்றிருந்த நிலையில், கோதுமையில் வேண்டாமென கூறியதால்தான் இந்நடவடிக்கையாம்.. புல்லட்சாமியின் இந்த உள்ளடி பற்றிதான் யூனியன் முழுக்க பரவலாக பேச்சு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பாமக மாநாட்டுக்கு கூப்பிட்ட எந்த கட்சியும் கலந்துக்கல போலயே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி அன்புமணியின் பாமக இன்னைக்கு சென்னை ராஜரத்தினம் மைதானத்துல ஆர்ப்பாட்டம் நடத்துது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளை தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் பாமக நேரில் அழைப்பு விடுத்துச்சு..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாமக வக்கீல் பாலு தலைமையிலான குழு சந்தித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்க கூப்பிட்டது. அதே மாதிரி விஜய்யின் தவெகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனா இந்த போராட்டத்துல அதிமுக கலந்துக்காதுனு தகவல் வெளியாயிருக்கு. பாமக கோரிக்கையை ஏத்து, 10.5 சதவீத இடஒதுக்கீடு வன்னியர்களுக்கு அதிமுக ஆட்சியில எடப்பாடி வழங்குனாரு. இதனால் தேர்தல் நேரத்துல, தென் மாவட்டங்களுக்குள்ள அவரால போக முடியல. கடும் எதிர்ப்பு இருந்தது. அதிமுக ஓட்டு அப்படியே தென் மாவட்டத்துல சரிந்தது. இதனால எதுக்குடா வம்புன்னு பாமக ஆர்ப்பாட்டத்துக்கு வர முடியலனு எடப்பாடி சொல்லிட்டாரு. அதே மாதிரி, ஈரோடு மக்கள் சந்திப்பை காரணம் காட்டி தவெகவும் கலந்துக்கலைனு சொல்லிருச்சாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ என மலராத கட்சியின் மாஜி தேசிய செயலாளர் ரொம்பவே புலம்புகிறாராமே..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘லிங்கசாமியின் பெயர் கொண்ட நதி மாவட்டத்தின் மலராத கட்சியைச் சேர்ந்த மாஜி தேசிய செயலாளர், சாரணர் தேர்தலில் கூட ஜெயிக்காத விரக்தியில், கடந்த எம்பி தேர்தலின்போது, ‘இனிமேல் தேர்தல் போட்டியிட மாட்டேன்’ என அறிவித்தார். இப்படி கூறினால் மாவட்டத்தில் தொண்டர்கள் பதறுவார்கள். தேசிய தலைமையும் பொறுப்பு கொடுக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி எந்த அதிகார பதவியையும் தலைமை கொடுக்கவில்லை. காத்திருந்து, காத்திருந்து வெறுத்துப் போய், மீண்டும் தேர்தல் அரசியலுக்கு வந்துவிடலாம் என நினைத்த நேரத்தில் இலைக்கட்சியுடன் கூட்டணி உறுதியானது. இதனால் குடி என முடியும் தனது வீடு அமைந்துள்ள தொகுதியில் போட்டியிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.. இதற்கேற்ப தனக்கு சீட் தருமாறு கட்சி தலைமையிடம் வேண்டி கேட்டுக் கொண்டாராம்.. இதனால் மலராத கட்சி சார்பில் இலைக்கட்சி தலைமையிடம், கொடுக்கப்பட்டுள்ள தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் முன்னுரிமை பட்டியலில் குடி என முடியும் தொகுதி இடம்பெற்றுள்ளதாம்.. இவர் சும்மா இருந்தாலும் இவரது வாய் சும்மா இருக்காது... எதையாவது ஏடாகூடமா பேசிவிட்டு ஒட்டுமொத்தமாக தேர்தல் நேரத்துல பரபரப்பாக்கிடுவார், இதனால் தேவையில்லாத சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, இவருக்கு சீட் ெகாடுக்கக் கூடாது என அவருக்கு எதிரான கோஷ்டியினர் தலைமையை நச்சரித்து வருகிறார்களாம்.. இதனால், கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாமல் போய்விடுவோமோ என மாஜி தேசிய செயலாளர் புலம்பும் நிலைக்கு சென்றுவிட்டாராம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தொகுதிக்கு 30 பேர் விருப்பமனு போட உத்தரவு போட்டிருக்காராமே இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவர் தந்திரத்தை கையாளுவதில் வல்லவருன்னு அவரது அடிப்பொடிகள் அடிச்சி சொல்றாங்க.. ஒவ்வொரு மாநிலங்களிலும் மலராத தேசிய கட்சி, ஆளுங்கட்சிகளுக்கு நல்லது செய்வது போல சென்று ஆக்டோபஸ் போல ஆட்கொள்வதை லட்சியமாக கொண்டிருக்காங்களாம்.. தற்போது மம்மி இல்லாத இலைக்கட்சியை விழுங்கிடும் வகையில் காலடி எடுத்து வச்சிருக்காங்களாம்.. இவையெல்லாம் இலைக்கட்சி தலைவருக்கு தெரியுமாம்.. என்றாலும் மலராத கட்சிக்குள் சிக்கிக்கொள்ளாமல் கழுவுற மீனில் நழுவும் மீனாக ஓடிக்கிட்டிருக்காராம்.. தன்னை ஒரு பெரியண்ணன் போல காட்டிக்கிட்டிருக்கும் மலராத கட்சி, சிறு சிறு கட்சிகளை எல்லாம் ஒருங்கிணைத்துக்கொண்டு வருகிறோமுன்று சொல்லியிருக்காங்க.. அவர்களுக்கெல்லாம் சேர்த்து எங்களுக்கு 80 தொகுதிக்கு மேல் கொடுத்திடணுமுன்னு பட்டியலை கொடுத்திருக்காங்க.. இதனை பார்த்த இலைக்கட்சி தலைவர் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.. அதுவும் இலைக்கட்சியின் கோட்டை என சொல்லப்படும் கொங்கு மண்டலத்திலேயே பத்து தொகுதிக்கான பட்டியலும் இருக்குதாம்.. ஆனால் இலைக்கட்சி தலைவரோ மலராத கட்சிக்கு 25 தொகுதியும், அதனுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் குக்கர்காரர், தேனிக்காரர் உள்ளிட்ட 7 பேருக்கும் சேர்த்து அதிக பட்சமாக 46 தொகுதியை ஒதுக்கலாமுன்னு முடிவு செஞ்சி வச்சிருக்காராம்.. அதெல்லாம் முடியாதுன்னு அல்வாக்காரர் ஒத்தக்காலில் நிற்பதாகவும் சொல்லப்படுது.. அதே நேரத்தில் கூட்டணி ஏதும் சரியாக இல்லை, ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்ட இலைக்கட்சிக்காரங்க தெறித்து ஓடும் நிலையில் இருக்காங்களாம்.. ஆனாலும் ஆட்சியை பிடிக்கப்போறோம் என்ற தைரியத்தை ஊட்டும் வகையில் கட்சிக்காரங்க ரொம்பவும் ஆர்வமாக இருக்காங்கன்னு உலகுக்கு காட்டும் நடவடிக்கையை எடுத்திருக்காராம் இலைக்கட்சி தலைவர்.. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் அனைவரும் விருப்பமனு தாக்கல் செய்வதோடு, இலைக்கட்சி தலைவருக்கும் ஒரு விருப்பமனு கொடுக்கணுமுன்னு உத்தரவு போடப்பட்டிருக்காம்.. இதனால வட்ட செயலாளர் முதல் மா.செ.வரை அடிவயிறு கலங்க கலங்க விருப்பமனு தாக்கல் செய்றாங்களாம்.. ஒரு தொகுதிக்கு குறைந்தது 30 பேராவது பணம் கட்டுவதுதான் இலக்காக இருக்குதாம்.. இதன்மூலம் மலராத கட்சிக்கு ஷாக் கொடுப்பதுடன், கட்சியினரை உற்சாகப்படுத்தவும் போட்டிருக்கும் திட்டமாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.