Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

மலராத கட்சியை கழற்றிவிட முடியாமல் தவிக்கும் புல்லட்சாமியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சுரத்தில்லாமல் முடிஞ்சிருச்சாமே மாம்பழ தந்தையார் ஆர்ப்பாட்டம்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாம்பழ கட்சியின் பிடிமானம் தன்னிடம்தான் உள்ளது என்பதை நிரூபிக்க கட்சியின் நிறுவன தலைவரான தைலாபுரம் மருத்துவர் மாநிலம் முழுவதும் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தை நடத்தினார். இதில் வெயிலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஒரு காலத்தில் அந்த கட்சியின் மாநில தலைவராகவும், நிறுவன தலைவரின் வலதுகரமாகவும் இருந்த தீரமானவர் கலந்து கொண்டாராம். அவரோடு பக்கத்து யூனியன் பிரதேசத்து நிர்வாகியும் கலந்து கொண்டாராம்.

இந்த கூட்டத்தில் இளைஞர்கள் யாரும் இல்லையாம். வயதான பழைய நிர்வாகிகள், தற்போதைய நிர்வாகிகள் ஒருசிலர் மட்டும் கலந்து கொண்டார்களாம். மற்றவர்கள் அனைவரும் அழைத்து வரப்பட்ட பெண்கள்தானாம். இந்த ஆர்ப்பாட்டத்தில் தைலாபுரத்தவரின் மகன் அணியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கலந்து கொண்டிருந்தார். அவர் எப்படி இருந்த கட்சி, இப்படி ஆயிடுச்சே. தந்தை, மகன் ஈகோவால் சின்னம் பறிபோய் கட்சியே அழிஞ்சிடும் போலிருக்கேன்னு புலம்பியபடி சென்றார்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பிரேக் பாஸ்ட் சாப்பிட வரமறுத்து முரண்டு பிடித்தாராமே புல்லட்சாமி...’’ என்று கேட்டார் பீட்டர் மாா.

‘‘புதுச்சேரி பாஜவை எப்படியாவது கழற்றிவிட்டால்தான் வரும் தேர்தலில் போனியாக முடியும் என்பது புல்லட்சாமியின் கணக்கு. ஆனால் பாஜ என்பது காலை சுற்றிய பாம்பு என்பதும், விட்டால் கொத்திவிடும் என்பதும் தெரியும். அவ்வப்போது பாஜ மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் புல்லட்சாமி, சில நாட்களுக்கு பிறகு அமைதியாகிவிடுவார். அதுபோல கடந்த வாரம் புல்லட்சாமியை சந்திக்க போன, மேலிடப்பொறுப்பாளர் சுரானாவிடம், கூட்டணி குறித்து பேச்சை எடுத்தபோது, உங்க வழியை நீங்க பார்த்து கொள்ளுங்கள் என முகத்தில் அறைந்தார் போல கூறினாராம்.

இதனால் சில மணித்துளிகளில் பாஜ நிர்வாகிகள் வெளியேறிவிட்டனர். வரும் 15ம் தேதி அமித்ஷா, கூட்டணி விவகாரம் குறித்து பேச தமிழகம் வரவுள்ளார். அந்த நேரத்தில், புதுச்சேரியிலும் கூட்டணி இறுதி செய்துவிடலாம் என பவர்புல் நாயகனுக்கு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். புல்லட்சாமியை சமாதானம் செய்து அழைத்து வர உத்தரவாம். கடந்த 11ம் தேதி பாரதியார் பிறந்தநாளன்று, புல்லட்சாமியை, பிரேக் பாஸ்ட் சாப்பிட வருமாறு பவர்புல் நாயகன், லோக்நிவாசுக்கு அழைத்துள்ளார். ஆமா, இப்ப இதுதான் முக்கியமா? வரமாட்டேன் போ.. எனக்கூறியுள்ளார். புல்லட்சாமி முரண்டு பிடிக்கும் விவகாரம் பாஜ மேலிடத்துக்கு சென்றுவிட்டதாம், வா என்று கூப்பிட்டால் வரமாட்டாராமா? ஸ்பெஷல் ட்ரீட்மென்ட் ஒன்னு கொடுப்போம். அப்பதான் நம்மை மதிப்பாரு. அவரை சுற்றி எப்போதும் இருக்கும் சிலரை லிஸ்ட் எடுத்து, ஸ்கெட்ச் போடுதாம், ஒன்றிய அரசு ஏஜென்சிகள். வெளிப்படையா வெளியே போகட்டும்பா.. ஏன் இறுக்கி, இறுக்கி பிடுக்கிறீங்க, விடுங்க பாத்துக்கலாம் என பாஜ தேசிய தலைமை கூறியுள்ளதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல கொள்ளையனுக்கு அடைக்கலம் கொடுத்த விவகாரத்தில் ‘கிலி’யில் வக்கீல் இருக்காராமே..’’ என்றார் பீ்ட்டர் மாமா.

‘‘மலைக்கோட்டை மாநகரில் சுட்டு பிடிக்கப்பட்ட பூட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனுக்கு மலைக்கோட்டை நகரை சேர்ந்த வக்கீல் ஒருவர் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருந்தாராம்... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டி இருந்த அவரிடமிருந்து கோல்டு, ‘விட்டமின் ப’ ஆகியவற்றை அந்த வக்கீலிடம் தான் கொடுத்து வைத்திருந்ததாக விசாரணையில் தெரிய வந்ததாம்... அந்த வக்கீல் யார் என்பது குறித்து தீவிர விசாரணையில் காக்கி துறை களத்தில் இறங்கியிருக்காங்க. விசாரணைக்கு பின்னர் கொள்ளையனுக்கு பின்னால் இருக்க கூடிய நெட்வொர்க் யார் என்பது விரைவில் தெரியவருமாம். இந்த தகவல் தெரிய வந்த அந்த வக்கீல் தற்போது ‘கிலி’யில் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

தூங்கா நகர் பல்கலைக்கழகத்தில் பணியாளர்கள், ஆய்வு மேற்கொள்வோருக்கென குடியிருப்புகள் உள்ளன. இதில் ஆய்வு மேற்கொள்வோருக்காக மிக குறைந்த கட்டணத்தில் குடியிருப்புகள் வாடகைக்கு வழங்குவது வழக்கம். ஆய்வு முடிந்த பின்னர் அந்த குடியிருப்புகளை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தற்போது பெரும்பாலானோர் ஆய்வு முடித்து பல்கலைக்கழகம் அல்லாத பல்வேறு வெளியிடங்களில் வேலைக்கு சேர்ந்த பின்னரும் இந்த குடியிருப்புகளை காலி செய்து பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்காமலும், சிலர் குடியிருப்புகளை வாங்கி உள் வாடகைக்கு விட்டு அதன் மூலம் கணிசமான வருவாயும் ஈட்டி வருகின்றனர். இதை பல்கலைக்கழக நிர்வாகத்தல் உள்ள சில முக்கிய அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் வாடகை பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாத கமிஷனாக பெற்று கொண்டு, கண்டும் காணாதிருக்கும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குடியிருப்பு வாடகை வசூல் வகையில் மட்டும் ரூ.1 கோடிக்கு மேல் நிலுவை இருப்பதும் தெரியவந்துள்ளது. பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கும்போது, இதுபோன்ற சிலரது செயல்களால் மேலும் நிதி நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் நிலைக்கு போயுள்ளது. இது குறித்து உயர்கல்வி துறைக்கு புகார்கள் குவிந்து வரும் நிலையில், இலைக்கட்சி காலத்திலிருந்து, இப்போதும் பணி தொடரும் சிலர் கொஞ்சமும் அச்சமின்றி வசூல் தொடர்கின்றனராம். விரைவில் அதிரடி நடவடிக்கை இருக்கிறதென விபரமறிந்தவர்கள் எச்சரித்து வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.