புதுடெல்லி: இந்தியா தலைமையில் புது டெல்லியில் இம்மாதம் நடைபெற உள்ள 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 12, 13-ம் தேதிகளில் பாரத் மண்டபத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் உறுப்பு மற்றும் கூட்டணி நாடுகளின் தலைவர்கள், அழைப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக இந்தியா இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி 4-வது முறையாக பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது.
‘வலிமை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பை உருவாக்குதல்’ என்பது இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமைக்கான கருப்பொருளாகும். இதன் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் 25-க்கும் மேற்பட்ட நகரங்களில் 350-க்கும் அதிகமான கூட்டங்கள் மற்றும் உயர்நிலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. குட்டெரெஸின் தற்போதைய பதவிக்காலம் டிசம்பர் 2026-ல் முடிவடைய உள்ளது.



