Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஐநா பாதுகாப்பு சபையின் சீர்த்திருத்த பேச்சுவார்த்தையை 18வது ஆண்டாக நீட்டிக்க முடிவு: இந்தியா கடும் விமர்சனம்

ஐக்கிய நாடுகள் சபை: ஐநா பாதுகாப்பு சபையின் சீர்த்திருத்த பேச்சுவார்த்தையை 18வது ஆண்டாக நீட்டிக்க முடிவு செய்யப்பட்டதற்கு இந்தியா கடும் விமர்சனம் செய்தது. ஐநா பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் பெற்ற அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாகவும், சுழற்சி முறையில் 10 நாடுகள் நிரந்தரமற்ற உறுப்பினர்களாகவும் உள்ளன. கடந்த 1965ல் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 6ல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்பட்டு முதல் சீர்த்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிறகு, நிரந்தர நாடுகளின் எண்ணிக்கையை உயர்த்துவது உள்ளிட்ட சீர்த்திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2009ல் தொடங்கப்பட்டது. இதற்காக அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இதற்கான 17வது சுற்று பேச்சுவார்த்தை ஐநா பாதுகாப்பு சபையில் நேற்று முன்தினம் நடந்த நிலையில், வழக்கம் போல எந்த உறுதியான முடிவுகளோ, காலக்கெடுவோ இல்லாமல் 18வது ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

இதன்படி, வரும் செப்டம்பரில் தொடங்க உள்ள ஐநா பொதுச் சபையின் 81வது கூட்டத்தொடரிலும் பாதுகாப்பு சபையை சீர்த்திருத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடரும். இந்த முடிவை இந்தியா ஏற்றுக் கொண்டாலும் தனது கடுமையான விமர்சனத்தையும் முன்வைத்தது. ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் பர்வதனேனி ஹரிஷ் பேசுகையில், ‘‘உலகம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்?

உலகெங்கிலும் உள்ள மோதல்களுக்கு தீர்வு காண்பதில் பாதுகாப்பு சபை தோல்வி அடைந்துள்ள நிலையில் ஐநா பாதுகாப்புச் சபையில் விரிவான சீர்திருத்தங்களை கொண்டுவருவதற்கான தேவை முன்னெப்போதையும் விட முக்கியமாகவும் அவசரமாகவும் உள்ளது. ஒரு சில உறுப்பு நாடுகளின் குறுகிய மற்றும் பிளவுபடுத்தும் நோக்கங்களால் இந்தச் செயல்முறை முடக்கப்படக் கூடாது’’ என்றார்.

* கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

ஐநா பாதுகாப்பு சபையில் பேசிய இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், ‘‘மேற்கு ஆசியாவில் மீண்டும் மோதல்கள் அதிகரிப்பது மிகவும் கவலையளிக்கிறது. இந்த பதற்றத்தை தணிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள இந்தியா அழைப்பு விடுக்கிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் பல கப்பல்கள் மீது சமீபத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டதையும் நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இப்பிராந்தியத்தில் உள்ள சர்வதேச நீர்வழிப்பாதைகள் வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தையும் வர்த்தகத்தையும் மீண்டும் உறுதி செய்யுமாறு இந்தியா வலியுறுத்துகிறது’’ என்றார்.