Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உக்ரைன் போர் காரணமாக மருத்துவ கனவை எட்டிப் பிடிக்க ஜார்ஜியா பறக்கும் இந்திய மாணவர்கள்

சென்னை: 4வது ஆண்டாக நீடிக்கும் உக்ரைன் போரின் காரணமாக, இந்திய மருத்துவ மாணவர்கள் பாதுகாப்பான மாற்று இடங்களை தேடிச் செல்லும் நிலையில், ஜார்ஜியா ஒரு புதிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் கல்வி மையமாக உருவெடுத்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (ஆர்டிஐ) மூலம் பெறப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) தாராளமயமாக்கப்பட்ட பணம் அனுப்பும் திட்டத்தின் (எல்ஆர்எஸ்) தரவுகளின்படி, ஜார்ஜியாவில் இந்திய மாணவர்களின் கல்விக்கான செலவு அதிவேகமாக உயர்ந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் இந்தியர்கள் ஜார்ஜியாவில் கல்விக்காகச் செலவிட்டது $10.33 மில்லியன். 2024-25 நிதியாண்டில் இந்த செலவு $50.25 மில்லியன் (சுமார் ஐந்து மடங்கு அதிகம்). ஜார்ஜியாவின் இந்த வளர்ச்சி பெரும்பாலும் உக்ரைன் இழந்த வாய்ப்புகளால்தான் ஏற்பட்டுள்ளது என்று தரவுகள் கூறுகிறது. 2018-19 நிதியாண்டில் உக்ரைனுக்கு இந்தியர்கள் கல்விக்காக அனுப்பிய தொகை $14.80 மில்லியன். 2024-25 நிதியாண்டில் இது வீழ்ச்சியடைந்து $2.40 மில்லியன் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது.

போருக்கு முன், இந்திய மாணவர்களின் முதல் 10 கல்வி மையங்களில் ஒன்றாக உக்ரைன் இருந்தது. 2021-22ல் அங்கு கல்விக்காக அனுப்பப்பட்ட தொகை $39.12 மில்லியன் ஆக இருந்தது. பிப்ரவரி 2022ல் ரஷ்யா படையெடுத்த பிறகு, 2022-23ல் இத்தொகை $10.6 மில்லியன் ஆகக் குறைந்தது. வெளிநாடுகளில் கல்விக்காகப் பணம் அனுப்பப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஜார்ஜியா 21வது இடத்தில் இருந்து 14வது இடத்திற்கு முன்னேறியது.

தற்போதைய நிலையின்படி, ஜார்ஜியா மேலும் முன்னேறி 12வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, 2019ல் 4,148 இந்திய மாணவர்கள் ஜார்ஜியாவுக்குச் சென்ற நிலையில், 2023ம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 10,470 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாட்டு கல்வி ஆலோசகர்களின் கூற்றுப்படி, ஜார்ஜியா ஏற்கனவே மருத்துவம் மற்றும் பிசியோதெரபி போன்ற துணை மருத்துவப் படிப்புகளுக்குப் பிரபலமாக இருந்தது.

ஆனால், உக்ரைன் போர் தொடங்கிய பிறகு, மாணவர்கள் பாதுகாப்பு காரணமாக உக்ரைனை தவிர்த்து, அங்குள்ள மாணவர்கள் ஜார்ஜிய பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் செய்யத் தொடங்கியதால், இதன் வளர்ச்சி இன்னும் அதிகரித்துள்ளது. “ஐரோப்பாவிற்கு அருகாமையில் இருப்பது, குறைந்த செலவு, எளிதான குடியுரிமை சட்டங்கள் (மற்றும் மருத்துவப் பட்டதாரிகள் அங்கேயே பணிபுரியும் வாய்ப்புகள் போன்ற காரணங்களால் ஜார்ஜியா தொடர்ந்து பிரபலமாக உள்ளது” என்றும் தெரிவிக்கின்றனர்.

போர் நடந்தபோதிலும், மருத்துவப் படிப்புகளுக்கு ரஷ்யா தற்போதும் ஒரு முக்கிய இடமாகவே உள்ளது. 2024-25ல் ரஷ்யாவில் கல்விக்காக இந்தியர்கள் செலவிட்டது $69.94 மில்லியன். இது முந்தைய 2023-24 ($22.48 மில்லியன்) நிதியாண்டை விட 200 சதவீதம் அதிகம். அதேபோல் ரஷ்யா, இந்திய மாணவர்களை ஈர்க்கும் நாடுகளில் 23வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

* மாணவர்கள் விரும்பும் முதல் 5 இடங்கள்

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தரவுகளின்படி, உயர்கல்விக்கு இந்திய மாணவர்கள் விரும்பும் முதல் 5 இடங்களில் கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் ஜெர்மனி ஆகியவை உள்ளன. 2024-25ல், அமெரிக்காவில் (கல்விக்கான இந்தியச் செலவில் முதலிடம் வகிக்கும் நாடு) கல்விக்காக அனுப்பப்பட்ட பணம், 2023-24ம் ஆண்டை ஒப்பிடுகையில் 10% குறைந்துள்ளது.

முதல் 5 நாடுகளில், கனடா 2023-24ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 43% என்ற அதிகபட்ச வீழ்ச்சியைக் கண்டது, அதே சமயம் ஆஸ்திரேலியா 5% வீழ்ச்சியைப் பதிவு செய்தது. இதற்கு நேர்மாறாக, இங்கிலாந்து 12% அதிகரிப்பையும், ஜெர்மனி ஒரு குறிப்பிடத்தக்க 70% அதிகரிப்பையும் அடைந்துள்ளன.