Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

உதயநிதி ஸ்டாலின் கைதில் வேகம் காட்டியதுபோல் காவிரி பிரச்னையில் வேகம் காட்டுவீர்களா? முதல்வர் விஜய்க்கு ஆர்பி உதயகுமார் கேள்வி

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும், அதனை கர்நாடக அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து நீர்வளத்துறை அமைச்சர் புஸ்ஸி ஆனந்திடம் நிருபர்கள் கேள்விகள் எழுப்பும்போது பதிலளிக்காமல் சிரித்து கொண்டே காரில் சென்று விடுகிறார். இதுதான் தவெக அமைச்சர்களின் பலரது நிலையாக உள்ளது. இதற்கு முதல்வர் விஜய்யின் மௌனமே பதிலாக இருக்கிறது.

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 14 சதவீதம் வரை குறைவாக பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் அணைகளின் கொள்ளளவு இந்தாண்டு 31.4 சதவீதம் வரை குறைந்துள்ளது. ஒட்டுமொத்த அளவான 2 லட்சத்து 24,000 கன அடியில் தற்போது வெறும் 70,439 கன அடியாக உள்ளது. அணைகளில் நீர்மட்டமும் 53 சதவீதத்திற்கு கீழ் சரிந்துள்ளது. இது குறித்து அமைச்சர் எதுவும் பதில் கூறவில்லை. தற்போது அரிசி விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இன்னும் சில வாரங்களில் ஒரு மூட்டை அரிசி 2,000 ரூபாயாக உயரவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில், யார் என்ன பேசினாலும், எதை பேசினாலும், எப்படி பேசினாலும், எவ்வளவு பேசினாலும், என்ன நடந்தாலும் நம்ம சி.எம். சாருக்கு கோபமே வராது. நம்ம சிஎம் சார் போட்ட உத்தரவால் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்துள்ளனர். நீங்க நேற்று காட்டிய வேகம் தெரிகிறது. தஞ்சாவூரில் இருந்து இரவோடு, இரவாக காவல் துறையை சென்னைக்கு வரவழைத்து மீண்டும் சென்னையில் இருந்து தஞ்சாவூர் வரைக்கும் தேர்தல் பிரசார பவனிபோல உதயநிதி ஸ்டாலினை அழைத்து சென்ற காட்சிகளை பார்த்தோம்.

தமிழக அணைகளில் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. அரிசி விலை உயர்ந்து கொண்டு வருகிறது. காவிரியில் தண்ணீர் வரவில்லை. முதல்வர், தனது வேகமான நடவடிக்கையை எல்லா நேரத்திலும், காவிரி உள்ளிட்ட எல்லா முக்கிய பிரச்னைகளிலும் காட்டுவாரா? என்பதே தமிழ்நாடு மக்களின் எதிர்பார்ப்பு. இவ்வாறு கூறியுள்ளார்.