உதயகுமார் மிகப்பெரிய நடிகர் 30 சிஆர் பேரம் பேசி என்னை இழுக்க அதிமுக முயற்சி: புது தகவல் அளிக்கும் மதுரை தவெக எம்எல்ஏ
அவனியாபுரம்: மதுரை மத்திய தொகுதி தவெக எம்எல்ஏ மதார் பதூருதீன், நேற்று மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார், மிகப்பெரிய நடிகர். அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சியில் பெண்கள், ‘விட்டுடுங்க அண்ணா... விட்டுடுங்கண்ணா’ என கதறியது நினைவில்லையா? அம்மா ஆட்சி தான் நடக்கணும் என்றார். செருப்பு இல்லாமல் நடந்தார். ஆட்சியும், அதிகாரமும் ஒரே கையில் இருக்கணும்னார்.
பின்னர் சின்னம்மா ஆட்சி இருக்கணும் எனக் கூறி தன்னை முன்னிறுத்திக் கொள்ள ஏதாவது ஒன்று செய்து கொண்டே இருப்பார். சீமான் இரட்டை வேடம் போடுபவர். கெட்டுப் போன பிரியாணி கொடுத்தாலும் சாப்பிடத் தயாராக உள்ளேன். பொது வேட்பாளராக போட்டியிட தயாராக உள்ளேன். திமுகவும், அதிமுகவும் ஆதரித்தால் போட்டியிட தயாராக உள்ளேன் எனக் கூறுகிறார். சீமான் இயக்கத்தை நடத்தி ஒன்றுமே செய்ய முடியவில்லை. டெபாசிட் கூட வாங்க முடியவில்லை. சீமான் சொல்லுவது எல்லாமே முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
பெரியாரை ஏற்க வேண்டும் என்பார். பின்னர், அதே பெரியாரை வேண்டாம் என்பார். நாங்கள் ஜெயிக்க மாட்டோம் என்று நினைத்தனர். இன்று ஜென் சி நல்லாட்சி தரும் இந்த ஆட்சியை கெடுக்க வேண்டும் என முயற்சிக்கின்றனர். குதிரை பேரத்தில் ஈடுபடுகின்றனர். இப்போது எனக்கே போன் வந்துள்ளது. என்னையே தொடர்பு கொண்டனர். இந்த நல்லாட்சியை கெடுப்பதற்கு எம்எல்ஏக்களை குதிரை பேரத்தில் இழுக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
‘முதலில், 15 சிஆர் வாங்கிக்கோங்க, நம்பிக்ைக இல்லாத தீர்மானம் கொண்டு வருவோம், அப்ப 15 சிஆர் வாங்கிக்கோங்க’ என்றனர். இதுகுறித்து தலைமையில் தெரிவித்து இருக்கின்றேன். தற்போது குதிரை பேர விஷயத்தில் அதிமுகவினர் ஈடுபடுகின்றனர். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் என்னை தொடர்பு கொள்கிறார்.
தவெக எம்எல்ஏக்கள் ரூ.100 கோடி கொடுத்தாலும் வரமாட்டார்கள். இந்த விவகாரத்தில் யார் ஈடுபட்டார்கள் என்று கூடிய விரைவில் வெளிவரும். அதிமுகவை நம்பி யாரும் கூட்டணிக்கு வரவில்லை. யாருடனும் கூட்டணி இல்லாமல் மக்களிடம் கூட்டணி வைத்தோம். இந்திய அரசியல் வரலாற்றில் 35 சதவீத வாக்குகளை அளித்து தவெகவிற்கு மக்கள் வெற்றியை தந்துள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.


