நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து புதிய ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் மறுசீரமைப்புக்காக அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதகமண்டலம் மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களை பிரித்து, குந்தா மற்றும் பந்தலூர் என 2 புதிய ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
26 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி உதகை ஊராட்சி, 12 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கி குந்தா ஊராட்சி என பிரிக்கப்பட்டுள்ளது. கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரித்து பந்தலூர் ஊராட்சி ஒன்றியம் என புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தொடர்பாக, பொதுமக்கள் தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், அவற்றை 6 வார காலத்திற்குள் தெரிவிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.


