திருவாரூர்: தங்கும் விடுதி முன்பாக வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டுவதற்கு ரூ.3 லட்சம் லஞ்சம் வாங்கியதாக நீர்வளத்துறை பொறியாளர்கள் இருவரை திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை சேர்ந்தவர் அபினேஷ் (27). இவர், வேளாங்கண்ணி பகுதியில் சொந்தமாக தங்கும் விடுதி ஒன்றை கட்டி வருகிறார். இந்த விடுதி முன்பாக பாசன வாய்க்கால் இருந்து வருவதால் அதன் குறுக்கே பாலம் கட்டுவதற்காக திருவாரூர் வெண்ணாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
பாலம் கட்டுவதற்கு அனுமதிக்காக ரூ.3 லட்சம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என உதவி செயற்பொறியாளர் மாணிக்கவேல் (46), உதவி பொறியாளர் வினோத் (36) ஆகியோர் கூறியுள்ளனர். இதுதொடர்பாக அபினேஷ், திருவாரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். போலீசார் ஆலோசனையின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.3லட்சத்துடன் திருவாரூர் வெண்ணாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு நேற்று சென்ற அபினேஷ், அங்கிருந்த செயற்பொறியாளர் மாணிக்கவேல், உதவி பொறியாளர் வினோத் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார், இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.




