டெல்லி: டெல்லியின் சாவ்ரி பஜார் மெட்ரோ நிலையம் அருகே உள்ள காவி சித்தாராவில் கட்டுமானத்தில் இருந்த மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இன்று காலை இடிந்து விழுந்தது. இந்த கட்டட விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 2 பேர் உயிரிழந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
தகவல் அறிந்து சம்பா இடத்திற்கு விரைந்து வந்த ஆறு தீயணைப்பு வாகனங்கல் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் தொடர்ந்து நிகழும் ஆறாவது பெரிய கட்டிட இடிபாட்டுச் சம்பவம் இதுவாகும். இதற்கு முன்னர் சாகேத், ரோகிணி, கரோல் பாக், சத்ய நிகேதன் மற்றும் சீமாபுரி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்தவை உட்பட 5 சம்பவங்களில் 21 பேர் உயிரிழந்தனர்.
இதில் குறிப்பாக சத்யா நிகேதன் பகுதியில் ஐந்து மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர். அந்த கட்டிடம் முறையான உரிமம் இன்றி செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


