பொன்னேரி: பொன்னேரி அருகே ஒரு தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் வாடகைக்கு எடுத்த 2 வாகனங்களை விற்று பணமோசடியில் ஈடுபட்டு, கடந்த 8 மாதங்களாக தலைமறைவான 2 பேரை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பொன்னேரி அருகே கொக்குமேடு பகுதியை சேர்ந்த தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் திவ்யாவை, கடந்த 2014ம் ஆண்டு சென்னை திருவான்மியூரை சேர்ந்த அறிவுநம்பி தொடர்பு கொண்டு, தனது டிராவல்ஸ் நிறுவனத்தில் தங்களின் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருமானம் பெறலாம் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அறிவுநம்பி டிராவல்ஸ் நிறுவனத்துக்கு முதலில் தனது 2 கார்களை திவ்யா வாடகைக்கு கொடுத்துள்ளார். அந்த 2 கார்களுக்கும் 10 மாதங்கள் அறிவுநம்பி சரியாக வாடகை கொடுத்துள்ளார். பின்னர், அந்த 2 கார்களுக்கும் சரியாக வாடகை கொடுக்கவில்லை.
இதுகுறித்து திவ்யா கேட்டபோது, அவரிடம் மேலும் 5 வாகனங்களை அறிவுநம்பி வாடகைக்கு கேட்டு பெற்றுள்ளார். பின்னர் அதற்கும் சரியாக வாடகை தராத நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் ஒரு வழக்கு தொடர்பாக அறிவுநம்பி கைதாகி சிறை சென்றுள்ளார். அவரை சிறையில் சந்தித்து திவ்யா கேட்டபோது, தனது நண்பரான மனுஆபிரஹாம் என்பவரிடம் வாகனங்களை கேட்குமாறு கூறியுள்ளார். மனுஆபிரஹாமை திவ்யா தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் திவ்யாவிடம் 5 வாகனங்களை திருப்பி கொடுத்துவிட்டு, அவரிடம் முதலில் வாங்கிய ஒரு கார் மற்றும் ஒரு சரக்கு வாகனத்தை திருப்பி தராமல் அலைக்கழித்து வந்துள்ளார்.
இதுகுறித்து பொன்னேரி காவல் நிலையத்தில் திவ்யா புகார் அளித்தார். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், திவ்யாவின் கார் மற்றும் சரக்கு வாகனத்தை திருப்பி தராமல் ஏமாற்றிய மனுஆபிரஹாம், தனது கூட்டாளியுடன் கேரள மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கேரளாவுக்கு பொன்னேரி தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு போலீசார் வந்திருப்பதை அறிந்து, மனுஆபிரஹாம் மற்றும் அவரது கூட்டாளி சென்னைக்கு தப்பி வந்துள்ளனர்.
இருவரின் செல்போன் அழைப்புகளை வைத்து, நேற்று மாலை சென்னை திருவான்மியூரில் பதுங்கியிருந்த கேரள மாநிலம், திருவனந்தபுரத்தை சேர்ந்த மனுஆபிரஹாம் (36), திருவான்மியூரை சேர்ந்த அவரது கூட்டாளி பிரேம்பாபு (38) ஆகிய 2 பேரையும் பொன்னேரி போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசரணையில், திவ்யாவிடம் வாடகைக்கு எடுத்த கார் மற்றும் சரக்கு வாகனத்தை விற்க முடியாமல், பழைய பொருள் கடையில் விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இருவரிடம் இருந்து ரூ.80 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



