Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தவெக ஆட்சி நீடிக்காது; 6 மாசத்துல தெரியும்... திண்டுக்கல் சீனிவாசன் சஸ்பென்ஸ்

மதுரை: ஐந்து வருடம் தவெக ஆட்சி நீடிக்காது, 6 மாதத்தில் பாருங்கள் எல்லாமே தெரியும் என அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119வது ஜெயந்தி மற்றும் 64வது குருபூஜை விழா முடிவடைந்த நிலையில், அவரது நினைவிடத்தில் இருந்து 13.5 கிலோ தங்க கவசம் பலத்த பாதுகாப்புடன் மதுரை அண்ணாநகர் வங்கியில் நேற்று ஒப்படைக்கப்பட்டது. அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனா ஆகியோர் வங்கியில் தங்கக்கவசத்தை ஒப்படைத்தனர்.

இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் அளித்த பேட்டி:

இடைத்தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து 3 பேர் வெளியில் சென்றதால் எந்த ஆபத்தும் இல்லை. அதை மதுராந்தம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் நிரூபித்துள்ளது. முதலமைச்சர் விஜய் 100 கிமீ ரோடு ஷோ போனாலும் இடைத்தேர்தலில் வெற்றி கிடைக்காது. ஒரு பைசா பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம் என்றனர். தாராபுரம் மற்றும் மதுராந்தகத்தில் ரூ.500 கொடுத்து வெற்றி பெற்றார்கள். தவெக கடந்த முறை வாங்கியதை விட வாக்கு சதவீதம் குறைந்திருக்கிறது. அதுவும், கூட்டணியால் கிடைத்த வெற்றி தான். விலைவாசி உயர்வை பாருங்கள். அரிசி விலையேற்றத்தால் மக்கள் நொந்துபோய் உள்ளனர். எந்த நன்மைகளும் இந்த ஆட்சியில் இல்லை.

அம்பாசமுத்திரம் பொதுவேட்பாளராக சீமான் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் விஷயத்தில், திமுக போன்ற நிலைப்பாடு தான் அதிமுகவுக்கும். தேர்தல் வந்த பின்பு அது குறித்து பேசுவோம்.

துணை குடியரசுத்தலைவர் வருகிறார் என்றால், எப்படி ஏற்பாடு செய்ய வேண்டும்? இவர்களுக்கு நிர்வாக திறமை இல்லை. விஜய் சென்றார் என்றால் மற்ற பகுதிகளில் மின்தடை ஏற்படுத்தி மின்சாரம் விநியோகிக்கிறார்கள். ஆனால், துணை குடியரசு தலைவர் வரும்போது மின்சார விநியோகத்தை முறையாக செய்யவில்லை. மீனாட்சி அம்மன் கோயில் மின்தடை குறித்து, மீனாட்சி தாயே அதனை பார்த்துக்கொள்வார்.

விஜய் தான் 15 ஆண்டு காலத்துக்கு முதலமைச்சர் என அமைச்சர்கள் பேசுவது என்பது பகல் கனவு காண்பது போல. நிச்சயம் அது நடக்காது. விலைவாசி உயர்வு, தொடர் மின் தட்டுப்பாடு, சட்டம், ஒழுங்கு பிரச்னையால் மக்கள் கொதித்து போயுள்ளனர். 5 ஆண்டுக்கு இந்த ஆட்சி வரவே வராது, நீடிக்காது. இன்னும் 6 மாதத்தில் பாருங்கள் எல்லாமே தெரியும். கட்டமைப்புடன் உள்ள கட்சி திமுகவும், அதிமுகவும் தான். ஆளுங்கட்சிக்கு 6 மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள் என்றனர். அதனால் டைம் கொடுத்தோம், இனி தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டம் தான். இவ்வாறு கூறினார்.