தவெக பெண்கள் அளித்த புகாரில் எம்எல்ஏ, நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி ஸ்டாலின் கேள்வி
திருச்சி: தஞ்சை செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தவெக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு என்ன என்ன துரோகம் செய்துள்ளார்கள். தேர்தல் வாக்குறுதி என பொய் வாக்குறுதி அளித்துள்ளார்கள். ஒவ்வொரு அமைச்சரும் இந்த 3 மாத காலங்கள்ல என்னென்ன பண்ணிட்டு இருக்காங்கன்னு ஆதாரத்தோடு குறிப்பிட்டு தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் பேசினேன்.
அதற்கெல்லாம் பதில் சொல்றதுக்கு தெம்பில்லாத, திராணியில்லாத, வக்கில்லாத ஒரு முதலமைச்சர், ஒரு டம்மி முதலமைச்சர் நமக்கு வாயச்சிருக்காரு. அதையெல்லாம் விட்டுட்டு, நான் பேசாத ஒரு விஷயத்தை கட் காப்பி பேஸ்ட் பண்ணி, சில விஷயங்களை ஆட் பண்ணியிருக்காங்க. நான் யாரையும் தவறாக பேசவில்லை. முழுக்க முழுக்க விவசாயிகளுக்காகத்தான் பேசினேன். நேத்து பேசும்போது கூட சொன்னேன், ஏதாவது ஒரு பிரச்னை மாநிலத்துல எழும்போது, இந்த அரசும், இந்த தற்குறி கூட்டத்தின் பாலிசியே ‘டைவர்ஷன் டாக்டிக்ஸ்’, முழுக்க முழுக்க பேக் நியூஸ்தான்.
அதை டைவர்ட் பண்றதுக்கு வேற ஏதாவது ஒரு பிரச்னையை எடுக்க வேண்டியது, முதலமைச்சர் ஒரு போட்டோஷூட் நடத்த வேண்டியது, திமுகவினுடைய திட்டங்களை ரீ-ஷூட்டிங் பாக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது, ரீல்ஸ் போடுறது, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் பள்ளிக்கூடத்துக்கு போய் அங்க இருக்கக்கூடிய மாணவர்கள் எல்லாம் வரச்சொல்லி, அவங்க கட்சி பெயரை சொல்லி கோஷம் போட சொல்லி அதை ரீல்ஸா போடுறது.
அவங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் மேல அவங்களுடைய நிர்வாகிகளே இதுவரைக்கும் பல்வேறு குற்றங்களை சொல்லிருக்காங்க, பாலியல் குற்றங்கள் சொல்லிருக்காங்க. அதற்கெல்லாம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாத்துக்கும் ஒரு டைவர்ஷன் டாக்டிக்ஸ் யூஸ் பண்றாரு இந்த அரசு, இந்த முதலமைச்சர். அதுமாதிரி இன்னைக்கு, நேத்து நான் பேசின பிறகு, அது விவசாயிகள் இடத்துல மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்ற பிறகு, விவசாயிகள் இடத்துல மிகப்பெரிய ஒரு எழுச்சி ஏற்பட்ட பிறகு, அதை எப்படியாவது டைவர்ட் பண்ணனும்,
நாளைக்கு (இன்று) சட்டமன்றம் வேற ஆரம்பிக்கும் போது, சட்டமன்றத்துல நிச்சயமாக இந்த டாபிக் பேசுவாங்க, எதிர்க்கட்சி இந்த பிரச்னையை எழுப்பும் அப்படின்னு தெரிஞ்சுகிட்டு, அதை முடக்கணும்னு, இந்த டைவர்ஷன் டாக்டிக்ஸாக இன்னைக்கு காலையில நான் பேசாத ஒரு விஷயத்தை பேசுனதாக திரிச்சு, கட் காப்பி பேஸ்ட் பண்ணி, அதை நேஷனல் மீடியா வரைக்கும் கொடுத்து பரவ வச்சு, காலையில காவல்துறை வந்து என்னை கைது செய்தாங்க.
கோர்ட்டுக்கு போயி என்ன சொல்லிருக்காங்க அரசு வழக்கறிஞர்? ‘அவரை கைது செய்யறது நோக்கமே எங்களுக்கு கிடையாது, ஜஸ்ட் விசாரணைக்கு கூட்டிட்டு போறோம்’ அப்படின்னு சொல்லி, அரசு செலவுல, மக்கள் வரிப்பணத்துல கிட்டத்தட்ட 3,000 காவலர்கள் பாதுகாப்போடு, ஒரு தீவிரவாதியை கூட்டிட்டு போற மாதிரி, சென்னையில இருந்து சாலை வழியாக 400 கி.மீ தஞ்சாவூர் வரைக்கும் கூட்டிட்டு போயி, எங்களை முறையாக பாத்துக்கல.
தஞ்சாவூர் கூட்டிட்டு போனாங்க. ஆனா தஞ்சாவூர் கூட்டிட்டு போகாம, நடுவுல செங்கிப்பட்டின்னு ஒரு காவல் நிலையத்துல இறக்கி, அங்க விசாரணைன்ற பேர்ல பல கேள்விகளை கேட்டு, இன்னைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. இதை நாங்க சட்டப்படி நிச்சயமாக சந்திப்போம். நான் இந்த நேரத்துல கூறிக்கொள்ள விரும்புவது, நான் எந்தவிதமான ஒரு தவறான எண்ணத்துல நேத்து பேசவே இல்லை. யாரையும் புண்படுத்தணும், யாரையும் தாழ்த்தி பேசணும், குறிப்பிட்டு சொன்னா பெண்களை தாழ்த்தி பேசணும்னு துளிகூட என்னுடைய மனசுல அது கிடையாது.
துளிகூட அந்த எண்ணம் கிடையாது. என்னுடைய பெற்றோர், என்னுடைய குடும்பம் என்னை அப்படி வளர்க்கல. என்னுடைய தாய், தந்தை என்னை அப்படி வளர்க்கல. எனக்கு திருமணம் ஆகி ஒரு மனைவி இருக்காங்க, அவங்களோட தான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்காங்க. எனக்கு ஒரு தங்கை இருக்காங்க. எனக்குன்னு ஒரு குடும்பம் இருக்கிறது.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு தாய்மாரையும் என்னுடைய குடும்பமாக, என்னுடைய தாயாக, என்னுடைய தங்கையாக நான் பார்த்துட்டு... அப்படித்தான் நான் நினைச்சிட்டு இருக்கேன். இந்த பொய் வழக்கு போட்டு என்னை பயமுறுத்தலாம்னு இந்த அரசு நினைச்சாங்க. அதற்கெல்லாம் பயப்படக்கூடிய ஆள் நான் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.
* ஏதாவது ஒரு பிரச்னை மாநிலத்துல எழும்போது இந்த அரசும், இந்த தற்குறி கூட்டத்தின் பாலிசியே ‘டைவர்ஷன் டாக்டிக்ஸ்’, முழுக்க முழுக்க பேக் நியூஸ் தான்.
* சிங்கிள் மீனிங்லதான் பேசினேன்... மீண்டும் பேசுவேன்...
‘‘எங்களுடைய கூட்டணிக் கட்சி தலைவர்கள் அனைவரும் நேற்று என்னோடு அந்த கூட்டத்துல என் கூட பங்கேற்று அவங்களும் சிறப்புரையாற்றினாங்க. அவங்கதான் சாட்சி நான் பேசுனதுக்கு. அவங்களும் இந்த கைது முயற்சியை வன்மையா கண்டிச்சிருக்காங்க. எனக்கு இருக்கக்கூடிய ஒரே வருத்தம், சில தலைவர்கள் நான் பேசுனதை முழுசாக கேட்காமலோ, பார்க்காமலோ, தீர ஆராயாமலோ, ‘நான் தவறாக பேசிட்டேன்’ அப்படின்னு கண்டனம் தெரிவிச்சிருக்காங்க. அது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருக்கு. நான் எந்த நேரத்திலும் அந்த மாதிரி தவறான எண்ணத்துல நான் பேசவே இல்லை.
விவசாயிகளுக்கு ஆதரவாக பேசுனதுக்காக இந்த தரங்கெட்ட அரசு கைது செஞ்சிருக்காங்க. நான் மீண்டும் சொல்றேன், இந்த கைதுக்கு நான் பயப்பட மாட்டேன். இன்னும் 100 முறை பேசுவேன், மீண்டும் பேசுவேன். அதுல சில பேர் சொல்லிருக்காங்க, ‘நான் இரட்டை அர்த்தத்துல பேசிட்டேன், டபுள் மீனிங்ல பேசிட்டேன்’ அப்படின்னு சொல்லிருக்காங்க. நான் நிச்சயமாக டபுள் மீனிங்ல எல்லாம் பேசவே இல்லை, நான் ஒரே மீனிங்ல தான் பேசினேன், சிங்கிள் மீனிங்ல தான் பேசினேன், மீண்டும் பேசுவேன்’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
* சர்க்கஸ் கூடாரம்
100 நாட்கள் நெருங்குற இந்த ஆட்சியை எப்படி பாக்குறீங்க என்ற நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு உதயநிதி ஸ்டாலின், ‘‘இதை நான் ஒரு ஆட்சியாவே பார்க்கலங்க. இதுவந்து ஒரு சர்க்கஸ் கூடாரம் மாதிரி நான் பார்க்கிறேன். இந்த முதலமைச்சருக்கு திமுகவோட வரலாறு தெரியல, தமிழ்நாட்டோட வரலாறு தெரியல. தெரியாம இதெல்லாம் பண்ணிட்டு இருக்காரு. மக்கள் இதெல்லாம் பார்த்துட்டு இருக்காங்க. நிச்சயம் மக்கள் இதற்கான பதிலை தரவேண்டிய நேரத்துல நிச்சயம் தருவாங்க’’ என்றார்.
* விஜய் போல ஓடி ஒளிய மாட்டோம்...
‘‘கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற அரசியல் பரப்புரையின் போது ஏற்பட்ட கோரமான கூட்ட நெரிசலில் சிக்கி, குழந்தைகள், பெண்கள் என மொத்தம் 41 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். அப்போது கரூரில் இருந்து திருச்சி வந்த தற்போதைய முதலமைச்சர் விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அந்தச் சமயத்தில், திருச்சி விமான நிலையத்தில் திரண்டிருந்த பத்திரிகையாளர்கள் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினர்.
ஆனால், அந்தத் துயரத்திற்கு பதிலளிக்க மனமில்லாமல், செய்தியாளர்களை எதிர்கொள்ள அஞ்சி அவர் எதற்கும் பதில் சொல்லாமல் அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டார். ஆனால், நாம் அப்படிப்பட்டவர்கள் அல்ல. எத்தகைய இக்கட்டான சூழ்நிலை வந்தாலும், எவ்வளவு கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டாலும், செய்தியாளர்களை எதிர்கொண்டு மக்களுக்கு பதில் சொல்லும் தைரியம் எப்போதும் நமக்கு உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் செய்தியாளர்களை சந்திப்பதை விட்டு ஓடி ஒளிய மாட்டோம்’’ என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.


