Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவெக அரசு பல்டி

ஒன்றிய பாஜ அரசு கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா, பெரும்பான்மை ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. எப்படியாவது தொகுதி மறுவரையறையை மீண்டும் கொண்டு வர பாஜ முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக டெல்லியில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், மகாராஷ்டிராவில் உத்தவ் சிவசேனா என எதிரணியில் வலுவாக இருந்த கட்சிகளின் பல எம்.பிக்களை பாஜ தங்கள் வசம் இழுத்துள்ளது. இதனால் மீண்டும் தொகுதி மறுவரையறை தீர்மானம் கொண்டு வருகிறது.

மக்கள் தொகை அடிப்படையில் நடத்தப்படும் நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை நடவடிக்கையானது தமிழ்நாட்டின் குரலையும், உரிமையையும் பலவீனப்படுத்தும் எனக்கூறி, அதனை தொடக்கத்திலிருந்தே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறார். இதனால் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 39ல் இருந்து 31 ஆக குறைய வாய்ப்புள்ளது. இது இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் முற்றிலுமாக பாதிக்கும் செயலாகும் என அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாட்டிற்கான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தின் தற்போதைய 7.18 சதவீத பங்கு (39 இடங்கள்) எந்த காரணத்தை கொண்டும் குறையாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் ஒரே குரலில் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில், தென் மண்டல குழுவின் 31வது கூட்டம் சென்னை கோவளத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பேசிய தமிழக முதல்வர் விஜய், “தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலமும் பாதிக்கப்படாது என்ற சட்டப்பூர்வ உறுதிமொழி தேவை. தொகுதி மறுவரையறையால் எந்த ஒரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையாது என ஒன்றிய அரசு சட்டப்பூர்வ உத்தரவாதம் தர வேண்டும்” என்று தெரிவித்தது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. முன்னதாக, தொகுதி மறுவரையறை தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், ‘தொகுதி மறுவரையறையே செய்யப்பட கூடாது.

தொகுதி எண்ணிக்கைகளை மாற்றாமல் மக்களவையில் தற்போது உள்ள 543 என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும்’ என்றார் முதல்வர் விஜய். இதற்காக அவர், சட்டப்பேரவையில் தனித் தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. தொகுதி மறுவரையறையே வேண்டாம் என எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் விஜய், சில நாட்களிலேயே தனது முடிவை மாற்றி ‘பாதிப்பு இல்லாத தொகுதி மறுவரையறை’ என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்ந்துள்ளார் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

‘ஒரே வாரத்தில் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்திருக்கிறார் விஜய். கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தவெகவின் இந்த இரட்டை வேட நாடகத்தை கேள்வி கேட்பார்களா?, இல்லை இதற்கும் முட்டுக்கொடுப்பார்களா?’ என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது. அதிமுகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ‘திரைப்படங்களில் பல்டி அடித்து டான்ஸ் ஆடுவதில் பெயர் பெற்றவர் விஜய். அதையெல்லாம் மிஞ்சிய அந்தர் பல்டியை, தற்போது தொகுதி மறுவரையறை விவகாரத்தில் அடித்து உள்ளார்’ என கிண்டல் செய்துள்ளது.

இதுபோன்று தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடுமையான விமர்சனத்தை கூறி உள்ளன. ஆட்சிக்கு வந்ததில் இருந்து தவெக அரசு கொள்கை, செயல்பாடுகள் மற்றும் உறுதித்தன்ைம இல்லாமல் செயல்படுகிறது. தொலைநோக்கு திட்டங்கள் இல்லாமல் திமுகவின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை செய்து வருகிறது. தொகுதி மறுவரையறை விஷயத்தில் சட்டமன்றத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அரசு நடக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.