Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தவெக அரசின் அலட்சியம்...!

தமிழ்நாட்டில் 2025-ம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட இடங்களில் 64 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 151 இடங்கள் காலியாக இருந்தன.

கடந்த மே 27-ம் தேதி தமிழ்நாடு அரசின் “தேர்வு கமிட்டி” இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில், இந்த 151 இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு திருப்பி அளித்து, அடுத்தக்கட்ட கலந்தாய்வை நடத்த ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழகத்தை சேர்ந்த தமிழ்வாணி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, அலோக் அராதே ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘தமிழ்நாட்டில் காலியாக உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு இடங்களை ஒன்றிய அரசிடம், தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்றபோது, அப்போதைய திமுக அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்துவைத்து, நிரப்பப்படாமல் உள்ள 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு செல்வதை தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு சரியான வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால், 151 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்றும் நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில், கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, கடந்த 2000-ம் ஆண்டில் இருந்து அரசுப்பணியில் உள்ள மருத்துவர்கள், உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மேற்கொள்ளும் இடஒதுக்கீடு, திமுக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-ல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உயர் சிறப்பு மருத்துவ படிப்பு மேற்கொண்டு, கிராமப்புற மக்களுக்கும் உயர் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்தது. ஆனால், அந்த உரிமை, தற்போதைய தவெக அரசால் பறிகொடுக்கப்பட்டு விட்டது.

தவெக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காததே இதற்கு முக்கிய காரணம். இது, தமிழக அரசுப்பணி மருத்துவர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. தவெக அரசின் இந்த செயலுக்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘‘6 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில், இந்தியா முழுவதும் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை திமுக போராடி பெற்றுத்தந்தது.

ஆனால் இன்றோ, மருத்துவ படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் நிலை வந்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் வாய்பொத்தி நின்ற தவெக அரசுதான் இதற்கு முழு காரணம்’’ என குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கில், முக்கியமான கட்டத்தில், தமிழ்நாடு அரசு நியமித்த மூத்த வழக்கறிஞர்கள் ஏன் ஆஜராகவில்லை? மிகுந்த முக்கியத்துவம் கொண்ட இந்த வழக்கில் தொடக்கம் முதல் அலட்சியம் ஏன்?

மூத்த வழக்கறிஞரை நியமிப்பதில் கூட தவெக அரசின் தாமதம் ஏன்? நியாயம் நம் பக்கம் இருந்தும் நீதிமன்றத்தில் எந்த வலுவான வாதங்களையும் எடுத்துவைக்காமல் ‘சரண்டர்’ ஆனது ஏன்? இதன் பின்னணி என்ன? என பல சந்தேகங்களை இந்த விவகாரம் ஏற்படுத்துகிறது. தமிழக மக்களுக்கும், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் தவெக அரசு என்ன பதில் சொல்லப்போகிறது..?