சென்னை: தவெக அரசின் முதல் பட்ஜெட் சற்று நேரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நிறைவு நாளில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 2026-27ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இன்று (புதன்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது.
காலை 10 மணிக்கு கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில், 2026-27ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட் இது என்பதால், தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி புதிய அறிவிப்புகள், திட்டங்கள் இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு, காவிரி உள்ளிட்ட பிரச்சனைகளை சட்டமன்றத்தில் எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமீட்டுள்ளனர்.
நாளை (6ம் தேதி) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய இருக்கிறார்.


