Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுவிட்டது; விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்: கோவையில் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: கோவையில் கட்டப்பட்டுள்ள 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்குப் பெரியார் பெயர் சூட்டியதற்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்குத் திராவிடர் கழகம் சார்பில் பாராட்டு விழா இன்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்; "என்ன பேசுவது என்றே தெரியாத நிலையில் உணர்ச்சிப் பெருக்கோடு இருக்கிறேன். மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்பதற்கான ஊக்கமாக இந்த பாராட்டு விழாவை பார்க்கிறேன். கோவையின் புதிய அடையாளமாக பெரியார் அறிவுலகம் மாறியுள்ளது. பெரியார் அறிவுலகத்தை கோவையின் அடையாளமாக மட்டுமல்ல தமிழ்நாட்டின் அடையாளமாக அமைத்தோம்.

திமுக ஆட்சியிலேயே பெரியார் அறிவுலகத்தின் 99 சதவீதம் பணிகள் முடித்துவிட்டோம். மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தபோது என்னை பாதுகாத்தவர் கி.வீரமணி. நாம் செல்ல வேண்டிய பாதையை தீர்மானிப்பது பெரியார் திடல்தான். திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்துக்குதான் அதிகமுறை அரசுமுறை பயணமாக வந்துள்ளேன்.

ஆட்சிக்கு வந்து ஒரே மாதத்தில் மின்வெட்டு பிரச்சனை வந்துவிட்டது. தவெக ஆட்சி வரவேண்டும் என வாக்களித்த மக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலை உருவாகியுள்ளது. மக்கள் குழந்தைகளுடன் வீதியில் இறங்கி போராடியும் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்குவதை கிடப்பில் போட்டு,அதிக விலைக்கு வாங்கியதை நியாயப்படுத்துகின்றனர்.

மதுரையில் மீனாட்சியம்மன் கோயிலுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வந்தபோது மின்வெட்டு ஏற்பட்டது. ஜெனரேட்டரில் இருந்து மின்சாரத்தை மாற்றும் போது மின்வெட்டு என அமைச்சர் விளக்கம் கொடுத்தார். ஆக, ஜெனரேட்டரில் இருந்து மின்சாரம் கொடுக்கும் நிலைதான் தமிழ்நாட்டில் இருக்கிறது. தொடர்ந்து சிறுமிகள் காணாமல் போகின்றனர். நூற்றுக்கு நூறு தூய சக்தி என்பவர்களின் ஆட்சி நாளுக்கு நாள் துர்நாற்றம் வீசுகிறது.

எல்லாத் துறைகளிலும் சோப்ளாங்கி ஆட்சி அதல பாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜோதிடர் சொன்னதால் பட்டு வேட்டி கட்டுகிறார் முதலமைச்சர் விஜய். முதலமைச்சர் பதவி என்பது 10 - 5 வேலையல்ல என்பதை முதல்வர் விஜய் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் ஒரு கிரிமினல் வழக்கில் தவெகவினர் சிக்குகின்றனர். தவெகவில் ஏராளமான வசூல் ராஜாக்கள் உள்ளனர். உண்மைகளைப் பார்த்து பொய்கள் பயப்படும்; வெளிச்சத்தைப் பார்த்து இருள் பயப்படும்.

அதேபோல நூலங்களையும், அறிவுச் செயல்பாடுகளையும் பார்த்து தவெக மூடர் கூடம் பயப்படுகிறது. குற்றவாளிகளை பிடிக்க துப்பில்லை என்றால் சிறையில் உள்ள கைதிகளைக் கூட பாதுகாக்க துப்பில்லை. தவெக ஆட்சியின் கேவலங்களை மறைக்க தான் திமுக தலைவர்கள் வீட்டில் ரெய்டு. மிரட்டலுக்கு பணிந்து திமுக பின்வாங்கியதாக வரலாறு கிடையாது. அழுத்த அழுத்த மேலே வருவதுதான் திமுகவின் டி.என்.ஏ.

முதலமைச்சர் எந்த தவறுக்காவது பொறுப்பேற்று விளக்கமோ, பதிலோ கொடுக்கிறாரா? இல்லை. எதைக் கேட்டாலும் திமுக என்பதே முதலமைச்சர் விஜயின் பதிலாக உள்ளது. பத்திரிகையாளர்களை கண்டாலே பயந்து ஓடுகிறார். இவ்வளவு வீக்கான முதலமைச்சரை இதுவரை தமிழ்நாடு பார்த்தது இல்லை. கொலையும் பாலியல் வன்கொடுமையும் தான் தவெக ஆட்சியில் ஏற்பட்டிருக்கும் தவறான மாற்றங்கள்.

சினிமாவில் மற்ற நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பி வெற்றி கண்டவர் விஜய். சினிமாவைப் போல அரசியலிலும் அவதூறு பரப்பி ஒருமுறை வென்றுவிட்டார் விஜய். மாதம் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கூடுதலாக செலவு செய்ய வேண்டிய கஷ்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுவிட்டது; விரைவில் மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள். தவெகவினர் செய்வது ஆரோக்கியமான அரசியல் அல்ல, கேவலமான அரசியல்" என பேசினார்.